திக்.. திக்.. நிமிடங்கள்..! உலக கோப்பையில் இந்தியாவுக்கு கிடைத்த 50வது வெற்றி..!
Recommended Video
சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி தமது 50வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
உலக கோப்பையின் 28வது ஆட்டத்தில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஒரு வழியாக தட்டுத் தடுமாறி 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. இந்த ரன், 2010ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களையும் முழுதும் ஆடி எடுத்த குறைவான ரன்களாகும்.
கேப்டன் கோலி மட்டுமே 63 பந்துகளில் 67 ரன்களை எப்படியோ எடுத்தார். கேதர் ஜாதவ் தடுமாறி, 68 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து கடைசி ஒவரில் அவுட் ஆனார். இடையில் விஜய் சங்கர் 4ம் நிலையில் இறங்கி 41 பந்துகளில் 29 ரன்களை எடுத்து கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டார்.

ரன்ரேட் குறைந்தது
தோனி, ரஷித் கானின் ஷார்ட் ஆக விழுந்த பந்துகளையெல்லாம் பீல்டர் கையில் நேராக அடித்து அடித்து ரன் ரேட்டை குறைத்து, ஏகத்துக்கும் சொதப்பி ரசிகர்களை டென்ஷன் ஏற்றினார். தோனி, 52 பந்துகள் ஆடி 28 ரன்களை எடுத்து ரஷீத் கான் பந்தை கோட்டை விட்டு ஸ்டம்ப்டு ஆனார். தமது ஒருநாள் கிரிக்கெட் வாழ்நாளில் 2வது முறைதான் தோனி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கிறார்.

கோலி கேட்ச்
அதை கண்டு ஒரு கட்டத்தில் பதறிய கோலி, நபியின் பந்தை ஆக்ரோஷமாக ஆட முயன்று கேட்சாகி வெளியேறினார். மொத்தம் 50 ஓவர்கள்.. அதாவது 300 பந்துகளில் 152 டாட் பால்கள்.. இந்திய அணியின் ரன் விகிதம் இப்படித் தான் இருந்தது.

ஆப்கான் திணறல்
ஆனாலும், 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் வீரர்களை இந்திய அணியின் பவுலர்கள் அவுட்டாக்கினர்.

கடைசி ஓவர் திக் திக்
இறுதியில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆப்கானிஸ்தான், 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, திக், திக் நிமிடங்களை முடித்து வைத்தார் ஷமி. ஒரு வழியாக, 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது.

இந்தியாவின் 50வது வெற்றி
போராடி பெற்ற இந்திய அணியின் இந்த வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியாக மாறிவிட்டது. உலக கோப்பையில் இது இந்தியாவின் 50வது வெற்றியாகும். கத்துக்குட்டி அணி தானே என்று நினைத்து கடைசி வரை போராடி... உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்ற போட்டி என்பதால் ரசிகர்களால் மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications