மொஹாலி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் தொடங்கியுள்ளது. இந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற அணியின் இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மொஹாலி மைதானம் சேஸிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி சேஸிங்கை தேர்வு செய்திருக்கிறது.
இதையடுத்து இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோன். கடந்த காலங்களில் இந்த மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருந்திருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன் சில பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியுள்ளது. சவால் நிறைந்த அணியான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் இல்லாததால் இந்திய அணியில் 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் இஷான் கிஷன் மிடில் ஆர்டரிலேயே விளையாடவுள்ளார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், நாங்களும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம். ஆனால் டாஸ் இழந்தது குறித்து கவலையில்லை. மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அதனால் வார்னர் - மிட்செல் மார்ஷ் தொடக்க கொடுக்கவுள்ளனர். அவர்களை தொடர்ந்து ஸ்மித், லபுஷேன் மற்றும் இங்லிஸ் வருவார்கள் என்று தெரிவித்தார்.
இந்திய அணி விவரம்: சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பும்ரா, ஷமி
ஆஸ்திரேலிய அணி விவரம்: வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், க்ரீன், இங்லிஸ், ஸ்டாய்னிஸ், ஷார்ட், கம்மின்ஸ், அப்பாட், ஆடம் ஸாம்பா