கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இளம் வீரர் திலக் வர்மா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் வங்கதேச அணி ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது. இதனால் சம்பிரதாய ஆட்டமாகவே இந்த ஆட்டம் நடக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதனால் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியின் விராட் கோலி, முகமது சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இளம் வீரர் திலக் வர்மா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய விரும்புகிறோம். இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளில் முதல் பேட்டிங் செய்துள்ளோம். அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புகிறேன். இந்த ஆடுகளம் அனைத்து வகையிலும் செயல்படுகிறது. ஸ்விங், பவுன்ஸ், ஸ்பின் என்று அனைத்தும் இருக்கிறது. இதுவரை விளையாடாத சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வதா, பவுலிங் செய்வதா என்ற குழப்பத்தில் இருந்தேன். இன்றைய ஆட்டத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தன்ஜித் அறிமுகம் செய்யப்படுகிறார். உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்த தொடர் எங்களுக்கு பிரச்சனைகளை சரிசெய்ய மிகப்பெரிய ஒன்றாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா
வங்கதேச அணி விவரம்: லிட்டன் தாஸ், தன்ஜித், அனாமுல் ஹக், ஷகில் அல் ஹசன், ஹிர்தாய், ஷமிம் ஹொசைன், மெஹதி ஹசன் மிராஸ், மெஹதி ஹசன், நசும் அஹ்மத், ஹசன் ஷகிப், முஷ்டாஃபிகுர் ரஹ்மான்