மும்பை : உலகின் பல முன்னணி அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இடம்பெற்று இருப்பார்கள். 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் ஜாகீர் கான் உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய பங்காற்றினார்.
இதை போன்று 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு மிச்செல் ஸ்டார்க் அந்த அணி உலக கோப்பையில் வெல்ல முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார். ஆனால் தற்போது இந்திய அணியில் அப்படி எந்த ஒரு இடது கை வேகப் பந்துவீச்சாளரும் இடம் பெறவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், உலகக் கோப்பை அணியில் இரண்டு பேரை தான் இந்திய அணி தவறவிட்டதாக நான் கருதுகிறேன். ஒன்று லெக் ஸ்பின்னர் சாகல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங். இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் வலது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பந்தை ஸ்டெம்புக்குள் கொண்டுவர முடியும். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனென்றால் ஆட்டத்தின் தொடக்கத்தில் நாம் இரண்டு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வாய்ப்பாக இருக்கும். இதற்காக வலது கை வேகப்பந்துவீச்சாளர்களால் ஏதும் செய்ய முடியாது என்று நான் சொல்லவில்லை. இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அது இயற்கையாகவே அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன். உலகின் முன்னணி அணிகளில் பாருங்கள் சாகின் அப்ரிடி, மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு மிட்செல் ஸ்டார்க் மிகப்பெரிய பங்கு ஆற்றினார். இறுதிப்போட்டியில் மெக்குல்லத்தை மூன்றாவது பந்திலே ஆட்டம் இழக்க வைத்தார். இதற்கு காரணம் வலது கை பேட்ஸ்மேன்கள் பந்து உள்ளே வரும்போது அதனை அவர்கள் எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.
இதேபோன்று சாகலை நிச்சயமாக இந்திய அணி மிஸ் செய்யும்.
ஏனென்றால் அவர் ஒரு மேட்ச் வின்னர். தற்போது உள்ள சுழற் பந்துவீச்சாளர்களில் அவர்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். நிச்சயமாக நம்மால் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியும் என அவர் நினைத்திருப்பார். ஆனால் இவ்வளவு நிரூபித்தும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அணியில் இரண்டு இடது கை சுழற் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
அதில் கண்டிப்பாக இருவரும் பிளேயிங் லெவனில் இணைந்து விளையாட மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இடது கை பேட்ஸ்மேன்கள் எதிரணியில் அதிகமாக இருக்கும் போது ஜடேஜா அவருடைய முழு ஓவரையும் வீச முடியாத நிலை கூட இருக்கும். உங்களால் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய முடிகிறது என்றால் அதில் ஒன்று இடது கை சுழற் பந்துவீச்சாளர்,ஒரு லெக் ஸ்பின்னர், ஒரு ஆப் ஸ்பின்னர் என்று தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் லெக் ஸ்பின்னரும் இல்லாமல் , ஆப் ஸ்பின்னரும் இல்லாமல் இரண்டு இடது கை ஸ்பின்னர்களை தேர்வு செய்திருப்பது நிச்சயம் அதிர்ச்சியை அளிக்கிறது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.