ஆஸி.யை ஜெயிச்சதால எங்கள விட இந்தியாவுக்கு செம ஹேப்பி...!! ஒரு கேப்டனின் ஓபன் டாக்
மான்செஸ்டர்: ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது, எங்களை விட இந்திய அணிக்கு தான் அதிக மகிழ்ச்சி என்று தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடந்த இப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.
கேப்டன் டு பிளசிஸ் அபாரமாக ஆடி, 93 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் இது அவருக்கு 12வது சதம். நடப்பு உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் ஒருவர் அடிக்கும் முதல் சதமும் இதுதான்.

வார்னர் சதம்
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் வார்னர் அபார சதமடித்து, 122 ரன்களில் வெளியேறினார். அவருக்கு துணையாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 85 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.

வென்றது தென் ஆப்ரிக்கா
அதனால் அந்த அணி, 49.5 ஓவர்களில் 315 ரன்னுக்கு ஆல் அட்டானது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில், ரபாடா 3 விக்கெட்டும், பிரிடோரியஸ், பெலுக்வயா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். டுபிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தியாவுக்கு மகிழ்ச்சி
போட்டி முடிவில் அவர் கூறியதாவது: இந்த உலக கோப்பை தொடர் எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்க கூடியதாக மாறிவிட்டது. கடைசி 2 ஆட்டங்களில் தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றி பெற்றது ஆறுதலான ஒன்று. ஆஸ்திரேலியாவை நாங்கள் வென்றது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ இல்லையோ இந்திய அணிக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும்.

வெற்றி இங்கிலாந்துக்கு தான்
கடந்த 2, 3 போட்டிகளில் நியூசிலாந்து நிலை முற்றிலும் மாறிவிட்டது. அதனால், இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உள்ளூர் மைதானம் என்பதால் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, இங்கிலாந்து பைனலுக்குச் செல்லும். இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications