பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள கோஹ்லி, ரஹானே சிறப்பு வியூகம்!
அடிலெய்டு: உலக கோப்பை தொடரில் நாளை இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதனால் இரு நாட்டு ரசிகர்களும், வீரர்களும் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர். உலக கோப்பை பைனல் போலவே, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை பார்க்கின்றனர் இந்திய வீரர்கள்.
எனவே பாகிஸ்தானில் எந்தெந்த பவுலர்கள் மிரட்டக் கூடியவர்களோ அவர்களை லிஸ்ட் எடுத்து, அந்த பவுலர்களின் பந்து வீசும் முறையை ரிவ்யூ செய்து வருகின்றனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.

கோஹ்லி பயிற்சி
பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது, முகமது இர்பான் ஆகும். அவரது வேகப்பந்து பவுன்சாகி வரும் வாய்ப்புள்ளது. எனவே அதை எதிர்கொள்ள, 'இரண்டு பெஞ்ச்' முறையில் விராட் கோஹ்லி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

உயரமான பவுலர்கள்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபோது இந்திய கேப்டன் டோணி அதற்கு ஒரு காரணத்தை சொன்னார். அது என்னவென்றால், இங்கிலாந்து பவுலர்கள் உயரமாக இருப்பதால் பந்து நன்கு எழும்பி வருவதாகவும், அதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்றும் டோணி கூறியிருந்தார்.

பாகிஸ்தான் உயரத்தை சமாளிக்க திட்டம்
பாகிஸ்தான் அணியில் 7.1 அடி உயரம் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் உள்ளார். நாளைய போட்டியில் இவரைப் போன்ற பவுலர்களை சமாளிக்க, புதிய திட்டம் தீட்டியுள்ளனர் இந்திய வீரர்கள்.

பெஞ்ச் பயிற்சி
இதன்படி, நேற்றைய பேட்டிங் பயிற்சியின் போது, அரை மீட்டர் உயரமுள்ள இரண்டு சிறிய 'பெஞ்ச்' மீது நின்று, பயிற்சி நிபுணர் ராகவேந்திரா பந்துகளை 'பவுன்ஸ்' ஆகுமாறு எறிந்தார். இதனால் பந்துகள் நல்ல உயரத்தில் இருந்து வந்தன. இவற்றை கோஹ்லி சிறப்பாக எதிர்கொண்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயிற்சியில் ஈடுபட்ட இவரை, இயக்குனர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் பிளட்சர் தீவிரமாக கண்காணித்தனர்.

ரஹானேவும் பயிற்சி
கோஹ்லிக்கு அடுத்து ரகானே பேட்டிங் பயிற்சி செய்ய வந்தார். இவருக்கு உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துகளை 10 அடி உயரத்தில் இருந்து 'பிட்ச்' ஆகிச் செல்லுமாறு சிறிய 'பெஞ்ச்' மீது நின்று எறிந்தார்.

டோணிக்கு சுழல் பயிற்சி
கேப்டன் டோணி, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். இவருக்கு அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மையத்தை சேர்ந்த வீரர்கள் பந்து வீசினர்.


Click it and Unblock the Notifications