இலங்கை பெளலர்களுக்கு ஷொட்டு, டோணியின் வியூகத்திற்கு குட்டு: கவாஸ்கர்
மும்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மெத்தனமாக பேட் செய்ததாக விமர்சனம் செய்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், டோணி பவுலர்களை பயன்படுத்திய விதத்தையும் குறை சொல்லியுள்ளார்.
நேற்றைய முதலாவது டி20 ஆட்டத்தில், இந்தியாவை இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டதுதான் தோல்விக்கு காரணமாக மாறியது.
புனே பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பினும், பிட்சை புரிந்துகொள்ளாமல் இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டுகளை இழந்தனர்.

பலே பவுலர்கள்
இலங்கை அணியின் ரஜிதா, சங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தனர். இலங்கையின் அம்மூன்று வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு அபாரமாக இருந்தது.

நல்ல பவுலிங்
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது: இலங்கை அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். சரியான இடத்தில், சரியான அளவில் பந்துகளை பிட்ச் செய்தனர்.

பவுலர்களை தெரியாது
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, அந்த பவுலர்கள் பரிட்சையம் இல்லாதவர்கள். எனவே சற்று பொறுமையாக, கணித்து அவர்களை கையாண்டிருக்க வேண்டியது பேட்ஸ்மேன்கள் கடமையாக இருந்தது. நமது பேட்ஸ்மேன்கள் அதை செய்யவில்லை.

அவுட்டான பிறகும் அடியா
முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோதிலும், ஷாட் அடிப்பதிலேயே அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் குறியாக இருந்தனர். பந்து ஸ்விங் ஆகிவந்தபோது, அதை ட்ரைவ் செய்து ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மதிக்கனும்ப்பா
ஆஸ்திரேலியாவில் ஆடியதைபோலவே இங்கும் ஆட வேண்டும் என்று நினைத்தது தவறு. இந்திய அணி, இலங்கை வீரர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து, மதித்து ஆடியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் விக்கெட்டுகள் விழுந்திருக்காது.

எச்சரிக்கை மணி
கூடுதலாக 30 ரன்கள் அடித்திருந்தாலும், இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. இந்த போட்டி, இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியடித்துள்ளது. இனிமேல், ஜாக்கிரதையாக இலங்கையை இந்தியா கையாள வேண்டும் என்ற எச்சரிக்கையை வீரர்கள் உணர்ந்திருப்பார்கள்.

டோணி மீது அதிருப்தி
டோணி தனது பவுலர்களை பயன்படுத்திய விதத்தில் எனக்கு திருப்தியில்லை. 101 ரன்கள் மட்டுமே போர்டில் இருக்கும்போது, 20 ஓவர்கள் வரை போட்டி இழுத்துச்செல்லப்படாது என்பதை டோணி உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் டோணியோ, கடைசி கட்டத்தில் ஓவர் வீசுவதற்காக தனது முக்கிய பவுலர்களை முழு கோட்டா வீசச்செய்யவில்லை.

விக்கெட் முக்கியம்
அஸ்வின், நெஹ்ரா, பும்ரா ஆகிய மூவரும்தான், இந்தியாவின் முக்கிய பவுலர்கள். அவர்களை முழு ஓவர்களும் பந்து வீசச் செய்திருக்க வேண்டும். பார்ட்டைம் பவுலர்களை பந்து வீச வைத்தது டோணி செய்த தவறு. விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் இந்தியாவின் இலக்காக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications