டி20 உலககோப்பையில் பரிசீலிக்கவே இல்லை.. சரியான பதிலடி தந்த முகமது சிராஜ்.. பயந்து நடுங்கிய வீரர்கள்
பிர்மிங்காம் : இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் முகமது சிராஜ் அறிமுக வீரராக களமிறங்கி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
2022 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் இடம்பெறவில்லை.
மேலும் இந்தத் தொடரில் முகமது சிராஜின் பெயர் பரிசீலிக்கவே படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பதிலடி
இதனால் மனம் உடைந்த சிராஜ் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்சையர் அணிக்காக சிராஜ் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் சோமர் செட் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ள பாகிஸ்தானை சேர்ந்த இம்மாம் உல் ஹக் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

திணறிய பேட்ஸ்மேன்கள்
தொடர்ந்து அனல் பறக்கும் பந்துவீச்சை சிராஜ் வீச சோமர்செட் வீரர்கள் அதனை எதிர்கொள்ள கடுமையாக திணறினர். ஜார்ஜ் பார்ட்லெட் , ஜேம்ஸ் ரூவ் ஆகியோர் விக்கெட்டை முகமது சிராஜ் அடுத்தடுத்து கைப்பற்ற சோமர்செட் அணி 82 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சிராஜ் 5 விக்கெட்
இதனை அடுத்து அந்த அணியின் லீவிஸ் கிரிகோரி அதிரடியாக விளையாடி 97 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். சோமர்செட் அணியை மீட்டு விடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவருடைய விக்கெட்டையும் முகமது சிராஜ் கைப்பற்ற, கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலே ஐந்து விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்தார்.

மகிழ்ச்சி
இதே போன்று மற்றொரு இந்திய வீரரான ஜெயந்த் யாதவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சிராஜின் இந்த செயல்பாடு இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் சிராஜ் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்ற ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications