புவனேஸ்குமார் போட்ட அந்த அதி அற்புத "சதம்"...!
மும்பை: இந்தியாவின் கேவலமான தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள்தான். பார்ட் டைம் பவுலர்களான ரெய்னா, கோஹ்லியைத் தவிர மற்ற அத்தனை பேருமே போட்டி போட்டுக் கொண்டு ரன்களை வாரிக் கொடுத்ததைப் பார்த்தபோது அத்தனை ரசிகர்களுக்கும் வயிறு எரிந்தது.
ஏதோ ரன் கொடுக்கவே பிறந்தவர்கள் போல இந்த பவுலர்கள் பந்து வீசிய விதம்.. வெறித்தனமாக வாரிக் கொடுத்த விதம்.. பார்த்த ரசிகர்களை புல்லரிக்க வைத்து விட்டது.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடித்த அடியைப் பார்த்து பேசாமல் காலரிகளிலும் நாலு பீல்டர்களை நிறுத்தி வைக்க இந்தியாவுக்கு ஐசிசி ஸ்பெஷல் அனுமதி தர வேண்டும் என்று கூட கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

அகோர பவுலர் புவனேஸ்குமார்
வேகப் பந்து வீச்சாளர் புவனேஸ்குமாருக்கு நேற்று ரொம்ப கெட்ட நாளாகிப் போனது. முழு கோட்டாவான 10 ஓவர்களை வீசிய இவர் எவன் மூஞ்சிலடா இன்னிக்கு முழிச்சோம் என்று கடுப்பாக உணர்ந்திருப்பார்.

106 ரன்கள்
10 ஓவர்கள் பந்து வீசிய புவனேஸ்குமார் 106 ரன்களை அள்ளிக் கொடுத்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் பேட்டிங்கில் சதம் போட்டால் இவர் பவுலிங்கில் சதம் போட்டு அதிர வைத்தார். வீழ்த்தியது ஒரு விக்கெட் மட்டுமே. இத்தனைக்கும் இவர் போட்ட உதிரிகள் வெறும் 3 வைடுகள் மட்டுமே.

நம்பர் டூ வள்ளல் மோஹித் சர்மா
மோஹித் சர்மாதான் நம்பர் 2 வள்ளல். 7 ஓவர்கள் வீசிய இவர் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தி 84 ரன்களைக் கொடுத்துக் குவித்தார். இவர் மட்டும் 10 ஓவர்கள் வீசியிருந்தால் நிச்சயம் தென் ஆப்பிரிக்கா 500 ரன்களைத் தொட்டிருக்க வாய்ப்புண்டு!

3வது இடத்தில் ஸ்பின்னர் மிஸ்ரா
வேகப் பந்து வீச்சாளர்கள் மட்டும்தான் வள்ளலாக இருக்க முடியுமா.. நாங்களும் தருவோம்ல என்று தன் பங்குக்கு 78 ரன்களைக் கொடுத்து அதிக ரன் விட்டுக் கொடுத்தோர் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தார் அமித் மிஸ்ரா. ரன்களைக் கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை இவர்.

பஜ்ஜிக்கு 4
4வது அதிக ரன் விட்டுக் கொடுத்த பவுலர் ஹர்பஜன் சிங். இவர் 10 ஓவர் வீசி 1 விக்கெட் எடுத்து 70 ரன்களை அள்ளிக் கொடுத்தார்.

கெட்டதிலயும் நல்லதைப் பாருங்க
அக்சார் படேலுக்கு அடுத்த இடம். இவர் 8 ஓவர்கள் வீசி 65 ரன்களை அள்ளிக் கொடுத்தார். அதில் ஒரு வைடோ, பிற உதிரி ரன்னோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒரு விக்கெட்டையும் இவர் வீழ்த்தவில்லை.
மொத்தத்தில் நேற்று இந்திய பவுலர்களுக்கு கெட்ட நாள்.. கேவலமான நாள் என்பதில் சந்தேகம் இல்லை!


Click it and Unblock the Notifications