இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் குழுவில் 12 இந்தியர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். அவர்கள் அந்தத் தொடரை ஒளிபரப்பும் பணியை நிறுத்திவிட்டு நாடு திரும்ப வேண்டுமா? தங்களின் விசா ரத்து செய்யப்பட்டு விட்டதா? என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியா, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானியர்களின் விசாவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தானும் இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களின் விசாவை ரத்து செய்து 48 மணி நேரத்தில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஒளிபரப்பும் குழுவில் இடம் பெற்றுள்ள 12 இந்தியர்களும் தங்கள் பணியை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் டெலிகாம் ஏசியா என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த நிறுவனம் துபாயை சேர்ந்த நிறுவனம்.
அந்த நிறுவனத்தில் இந்த 12 இந்தியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஒளிபரப்பும் பணிக்காக வந்து இருப்பதால் அவர்களுக்கு சிறப்பு விசா அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அது பொதுவாக இந்தியர்களுக்கு பாகிஸ்தானில் அளிக்கப்படும் விசா அல்ல. மாறாக, அவர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஒளிபரப்புவதால் சிறப்பு விசா அளிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்தியர்களின் விசா பாகிஸ்தானில் ரத்து செய்யப்பட்ட நிலையில், இவர்களின் விசா ரத்து செய்யப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும், அவர்களில் 5 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையும் பெற்ற இந்தியர்கள். எனவே, அவர்கள் நாடு திரும்புவதாக இருந்தால் ஐக்கிய அரபு அமீரகத்துக்குத்தான் செல்வார்கள். எனவே அந்த ஐவருக்கும் எந்த சிக்கலும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி இடம் யோசனை கேட்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்தான் பாகிஸ்தான் உள்விவகாரங்களின் அமைச்சராகவும் இருக்கிறார். அவர் தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்திலும் இருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த ஐஎம்ஜி ரிலையன்ஸ் என்ற நிறுவனம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஒளிபரப்பும் பணியைச் செய்து வந்தது. அப்போது புல்வாமாவில் தாக்குதல் நடந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தங்கள் ஒளிபரப்பு பணியை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பியது. அதனால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய நஷ்ட ஈடு கேட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தற்போது அதிலும் இந்தியர்கள் பணிபுரிவதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.