மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை எந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் இந்தியா ஏ அணியுடன் தனிப்பட்ட முறையில் பயணம் செய்ததில்லை. கம்பீர் முதன்முறையாக அதை செய்ய உள்ளார்.
இந்தியா ஏ அணி அடுத்து இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்துக்கு பயணம் செல்ல உள்ளது.

அப்போது அடுத்த தலைமுறை வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், டெஸ்ட் அணியில் யாரை தேர்வு செய்யலாம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் கௌதம் கம்பீர் இந்தியா ஏ அணியுடன் பயணம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் சில வீரர்களும் அழைத்து செல்லப்படலாம் என கூறப்படுகிறது.
சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான், கருண் நாயர் ஆகியோருக்கு இந்தியா ஏ அணியில் இடம் அளிக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கம்பீரால் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது. அதே போல இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் சிலரும் கம்பீரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. அவர்களை டெஸ்ட் அணிக்கு வளர்த்து எடுக்க இந்த முயற்சி நடைபெற உள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தோல்வியை அடுத்து கௌதம் கம்பீர் பிசிசிஐ-யிடம் இது பற்றி விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் இருந்தவரை இந்தியா ஏ அணி அதிக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. பல அணிகளும் இந்தியாவுக்கு வந்து இந்தியா ஏ அணியுடன் விளையாடியது.
ஆனால், டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற பின் இந்தியா ஏ அணிக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. தற்போது அதை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என கௌதம் கம்பீர் அறிவுறுத்தி இருப்பதாகவும், அத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியை கட்டமைக்க வேண்டும் என்றால் இளம் தலைமுறை வீரர்களில் யார், யார் சிறப்பாக செயல்படுகிறார்கள், அவர்களது தனித்திறமை என்ன என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனவும் கௌதம் கம்பீர் முடிவு செய்து இருக்கிறார்.
அதன் காரணமாகவே அவர் இந்தியா ஏ அணியுடன் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கௌதம் கம்பீர் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கூட மிகப் பெரிய சாதனையாக பேசவில்லை, அவர் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு அடுத்து என்ன என்பதை நோக்கி நகர்ந்து விட்டார் என்பதை இந்த சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்திய டெஸ்ட் அணியில் இனி மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.