பேசாம ஓய்வு பெறலாம்.. துணை கேப்டனுக்கு நேர்ந்த கதி.. செஞ்சுரி அடித்தும் வேஸ்ட்.. என்ன காரணம்?
லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலம் துணை கேப்டனாக இருந்த அஜின்க்யா ரஹானே தற்போது வாய்ப்பின்றி உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியாவில் உள்ள சிறந்த டெஸ்ட் வீரர்கள் அனைவரும் துலீப் டிராபி என்ற உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.
இதில் பங்கேற்கும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படும் நிலையில், அந்தத் தொடரிலும் அஜின்க்யா ரஹானேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அவர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் லெய்செஸ்டர்ஷயர் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். தற்போது அவர் கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இது அவரது 40 வது முதல் தர டெஸ்ட் போட்டி சதம் ஆகும். இந்த சதம் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுத் தரும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் அவருக்கு இனி எப்போதும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என்கின்றனர் விமர்சகர்கள். அதற்கு முக்கிய காரணமே, ரஹானேவின் பேட்டிங் சராசரி தான்.
தற்போது அவர் கவுன்டி போட்டியில் சதம் அடித்து இருந்தாலும் 2024 ஆம் ஆண்டில் இதுவரை அவர் ஆடிய முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவரது சராசரி 23.5 ஆக மட்டுமே உள்ளது. 10 போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் அவர் பேட்டிங் ஆடி 376 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அது மட்டும் இன்றி அவர் கடந்த காலங்களில் இந்திய அணிக்காக ஆடிய போதும் மிகக் குறைந்த பேட்டிங் சராசரியை வைத்திருந்தார். அவரது ஒட்டுமொத்த சர்வதேச டெஸ்ட் பேட்டிங் சராசரி 38 மட்டுமே.
அவர் இந்திய டெஸ்ட் அணியில் உச்சத்தில் இருந்தது 2013 முதல் 2016 வரையிலான காலகட்டம். அப்போது வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி இருந்தார். மற்ற இந்திய வீரர்கள் எல்லாம் தென்னாப்பிரிக்காவில் தடுமாறிய போது, ரஹானே அபாரமாக செயல்பட்டு ரன் குவித்து இருந்தார். அவரது சராசரி தென்னாப்பிரிக்காவில் 52 ஆக உள்ளது.
அதேபோல, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் சதங்கள் அடித்திருக்கிறார். அப்போது விராட் கோலிக்கு அடுத்து சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால், 2017 முதல் அவரது சரிவு தொடங்கியது. 2017 மற்றும் 2018 இல் அவரது பேட்டிங் சராசரி 35க்கும் கீழ் இருந்தது. 2020இல் அவரது சராசரி 40 ஆக இருந்தது. 2021 இல் அது மொத்தமாக சரிந்து 21 குறைந்தது. அந்த ஆண்டுதான் அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தார். மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகும் அவரது சராசரி 21 ஆக இருந்தது.
2022 ஜனவரி வரை ரஹானேவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவர் தனது ஃபார்மை மீட்கவில்லை. இதை அடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவருக்கு திடீரென வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் அவர் 135 ரன்கள் குவித்து இருந்தார். அந்த சிறப்பான செயல்பாட்டை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால், அவர் மீண்டும் சொதப்பினார். அதன் பின் ரஹானே ஒட்டுமொத்தமாக இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். இந்தியா ஏ அணி மற்றும் இந்திய அணி ஆடும் பயிற்சிப் போட்டிகள் என எதிலும் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அடுத்து நடைபெற உள்ள உள்ளூர் தொடரான துலீப் டிராபியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடர்களிலும், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலும் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், அவர் இங்கிலாந்து மண்ணில் அடித்த ஒரு சதம் மட்டும் அவருக்கு இந்திய அணி வாய்ப்பை பெற்று தந்துவிடாது என்கிறார்கள் விமர்சகர்கள். தற்போது 35 வயது ஆகும் அஜின்க்யா ரஹானே இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் கூட உள்ளூர் போட்டிகளில் விளையாடலாம். ஆனால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது.


Click it and Unblock the Notifications