IND vs ENG: லண்டன் இந்திய தூதரகத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.. உருக்கமாக பேசிய கில், ஸ்ரேயாஸ்
லண்டன்: வெளிப்புற சத்தங்களில் இருந்து விலகி இருப்பது, மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் அழுத்தங்களைச் சிறந்த முறையில் கையாள தனக்கு உதவுகிறது என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை கில் வழிநடத்தவுள்ளார். இப்போட்டியில் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்ற இந்திய அணி இலக்கு நிர்ணயித்துள்ளது.
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய கில், "எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், வெளிப்புறக் சத்தங்களில் இருந்து என்னை விலக்கி வைத்திருப்பதன் மூலமும் நான் அழுத்தத்தைக் கையாள்கிறேன்" என்று கூறினார்.

சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்குத் தனது சக வீரர்களிடமிருந்து கிடைத்த ஆதரவே முக்கியக் காரணம் என்று கூறினார்.
இது குறித்து பேசிய அவர், "எனக்கு எப்படியாவது மருத்துவமனையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. எனது சக வீரர்களிடமிருந்து வந்த அழைப்புகள், நான் மீண்டும் தீவிரப் பயிற்சியைத் தொடங்கி, இன்னும் வலுவாக களமிறங்குவதற்குப் பெரும் ஊக்கமளித்தன" என்று குறிப்பிட்டார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்டு, இங்கிலாந்தை ஒரு "சிறப்பு வாய்ந்த இடம்" என்று வர்ணித்தார்.
மேலும் பேசிய கம்பீர், "இந்திய கிரிக்கெட் என்பது டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. தங்களின் சுயநலமற்ற ஆதரவை எந்தவித நிபந்தனையும் இன்றி வழங்கும் ஒவ்வொரு விசுவாசமான இந்திய கிரிக்கெட் ரசிகருக்கும் அது சொந்தமானது" என்று கூறினார்.
போட்டிகளுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் இருந்து விலகி, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு வீரர்களுக்கு ராஜீவ் சுக்லா அறிவுறுத்தினார். 'இந்தியா ஹவுஸில்' நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், "இந்தியாவில் 99 சதவீத மக்கள் தங்களை கிரிக்கெட் நிபுணர்களாகக் கருதுகிறார்கள், அதுதான் பெரிய பிரச்சனை. எனவே சமூக ஊடகங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்திய அணியில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. வீரர்கள் அனைவரும் அபார திறமை படைத்தவர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications

