மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு நடைமுறை ஜனநாயக ரீதியில் நடைபெற்றதாக பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் அதிர வைக்கும் பின்னணி வெளியாகி உள்ளது. அதாவது தலைமைப் பயிற்சியாளராக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர் பல மாதங்களுக்கு முன்பே இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னரே, ஐபிஎல் தொடரின் இடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் ஏற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது. குறிப்பாக ஐபிஎல் தொடர் முடிவடைந்த மறுநாள், அந்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் எனவும் பிசிசிஐ அறிவித்தது.

அதனால், ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருந்த பலரால் தங்கள் பணிச்சுமைக்கு இடையே இது குறித்து சிந்திக்கவும், முடிவு செய்யவும் முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், அந்த பதவிக்கு கவுதம் கம்பீர் மற்றும் முன்னாள் இந்திய மகளிர் அணி பயிற்சியாளரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ வி ராமன் ஆகிய இருவர் மட்டுமே விண்ணப்பம் அனுப்பியதாக கூறப்பட்டது.
அவர்கள் இருவருக்கும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது அதன் பின் ஒரு மாத காலத்திற்கு அந்த முடிவுகள் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டன. 2024 டி20 உலகக் கோப்பை முடிந்த பின் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். இதுவரை எந்த அணிக்கும் கம்பீர் பயிற்சியாளராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை ஆலோசகராகவே செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், அவர் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று கொடுத்ததால் அவருக்கு பயிற்சியாளர் பதவி கிடைத்ததாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால், இந்த முறை கொல்கத்தா அணி கோப்பை வெல்லாமல் போயிருந்தாலும் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பார்.
பயிற்சியாளர் தேர்வு விண்ணப்பம், நேர்முகத் தேர்வு எல்லாமே பெரும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே என தற்போது கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கவுதம் கம்பீர் தேர்தல் அரசியலில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. அவர் இதற்கு முந்தைய ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்து இருந்தார். அவர் இனி கிரிக்கெட் சார்ந்த பணிகளில் முழு கவனம் செலுத்தப் போகிறார் என கூறப்பட்டது. அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர இருப்பதால் தான் அரசியலில் இருந்தும் விலகி இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.