ஒரு வருஷத்துக்கு இந்திய அணி பக்கமே வர முடியாது.. 157 கிமீ. மயங்க் யாதவை ஓரங்கட்டிய பிசிசிஐ
மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவுக்கு அடுத்த ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அசாதாரணமாக 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அதிகபட்சமாக 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதை அடுத்து அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்ப்பார்கள் என்றும், 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம் பெறுவார் என்றும் கணிப்புகள் வெளியாகின. ஆனால், அவை அனைத்தையும் தூக்கி தூரப் போட்டது பிசிசிஐ. அவர் ஐபிஎல் தொடரிலேயே காயத்தால் பல போட்டிகளில் பந்து வீச முடியாமல் போனது அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
மயங்க் யாதவ் வேகமாக பந்து வீசினாலும் அவர் தனக்கு காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அத்துடன் அவர் மேலும் சிலர் பவுலிங் டெக்னிக்குகளை கற்றுக் கொள்ள கொண்டு சிறப்பாக செயல்பட்டு தன்னை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்துக் காட்ட வேண்டும் எனவும் இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.
அதிக டெக்னிக் இல்லாமல் வேகமாக பந்து வீசினால் மட்டுமே கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதற்கு உதாரணமாக சில ஆண்டுகள் முன் இந்திய அணியில் இடம் பெற்ற உம்ரான் மாலிக்கை சுட்டிக் காட்டுகிறார்கள். காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்டவர். ஆனால், அவரால் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
எனவே, மயங்க் யாதவ் அடுத்த ஓராண்டுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடி அதில் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதே சமயம், அவரை ஒட்டுமொத்தமாக கைவிடாமல் அவரை தேர்வு குழு மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பிலேயே வைக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இனி மயங்க் யாதவ் விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர், முஷ்டாக் அலி டி20 தொடர், துலீப் டிராபி ஆகிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று தனது திறமையை நிரூபிக்க வேண்டும். மேலும், அவர் அதிவேகத்தில் வீசுவதால் அவருக்கு எளிதாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்காமல் தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ளவும் அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் பிசிசிஐ கண்காணித்து, அதன் முடிவிலேயே மயங்க் யாதவை இந்திய அணியில் தேர்வு செய்வதா? வேண்டாமா? என்ற முடிவை எடுக்கும். எனவே, அடுத்து நடக்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் அவர் இடம் பெற மாட்டார் என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.


Click it and Unblock the Notifications