ரிங்கு சிங் மோதிரம் அணிவித்தவுடன் கலங்கிய பிரியா சரோஜ்.. ரஹ்மான் பாடல் ஒலிக்க நிச்சயதார்த்தம்
லக்னோ: இந்திய டி20 அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங்கின் நிச்சயதார்த்தம் இன்று லக்னோவில் நடந்து முடிந்தது. அங்கு 5 நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இந்த நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் ரிங்கு சிங் தனது வருங்கால மனைவியான மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜுக்கு 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை அணிவித்தார். அப்போது அந்த இடத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இந்தி பாடல் ஒன்று பின்னணியில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
மேலும், ரிங்கு சிங் மோதிரத்தை அணிவித்தவுடன் பிரியா சரோஜ் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அவர்களின் நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த விழா சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியா சரோஜ். அங்கு சமாஜ்வாடி கட்சியில் அவரது தந்தை முக்கியமான தலைவராக இருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பிரியா சரோஜ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
25 வயதில் அவர் மக்களவை உறுப்பினராகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கை திருமணம் செய்ய இருக்கிறார். கடந்த ஓராண்டாகவே இருவரும் பிரபலம் என்ற முறையில் ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும் தங்களின் குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெற வேண்டுமென அவர்கள் நினைத்தனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடந்தன. அதன் முடிவில் தற்போது ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இன்று லக்னோவில் உள்ள சென்ட்ரம் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். அகிலேஷ் யாதவ், ஜெயா பச்சன், டிம்பிள் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பிரவீன் குமார், பியூஷ் சாவ்லா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பிசிசிஐ துணைத்தலைவரான ராஜீவ் சுக்லா இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
சுமார் 300 விருந்தினர்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பார் கோடு ஸ்கேனர்கள் இருந்தன. அவற்றில் நிச்சயதார்த்த அழைப்பிதழை ஸ்கேன் செய்து மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
ரிங்கு சிங் அடுத்து ஆகஸ்ட் 26 அன்று தொடங்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார். அதுவரை அவர் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இல்லை.


Click it and Unblock the Notifications