
தடுப்பூசி
ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருந்த போதே இந்திய வீரர்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் அவை நடைபெறாமல் போனது. எனினும் அடுத்து வரும் சர்வதேச தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகிறது.

வீரர்களுக்கு கட்டுப்பாடு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் இறுதி போட்டி, இங்கிலாந்தில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் தங்களது வீட்டிற்கு அருகே உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கோவாக்சின் தடுப்பூசி கண்டிப்பாக போட்டுகொள்ள கூடாது எனவும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

காரணம் என்ன
இந்திய வீரர்கள் முதற்கட்ட தடுப்பூசியை தற்போது போட்டுக்கொண்டால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு 2வது கட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்குள் அவர்கள் இங்கிலாந்து சென்றுவிடுவார்கள். கோவாக்சின் தடுப்பூசி இந்திய தயாரிப்பாகும். இது இங்கிலாந்தில் கிடைப்பது சந்தேகம். ஆனால் கோவிஷீல்ட் தடுப்பூசியானது இங்கிலாந்து நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதனை போட்டுக்கொண்டால் இங்கிலாந்து சென்ற பிறகு 2வது கட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

கங்குலி விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, கோவிஷீல்ட் இங்கிலாந்து தயாரிப்பு என்பதால் இந்திய வீரர்கள் அதனை போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கிலாந்து சென்ற பிறகு 2ம் கட்ட தடுப்பூசி கிடைக்கும். அவர்கள் வேறு தடுப்பூசியை போட்டுக்கொண்டால் எந்த பயனும் இல்லாம போய்விடும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











