'ஐசியு டூ மைதானம்.. வெறும் 35 மணி நேரம்..' பாக். வீரர் ரிஸ்வானை பார்த்து மிரண்ட இந்திய மருத்துவர்
துபாய்: பொதுவாக 4, 5 நாட்கள் சிகிச்சை தேவைப்படும் நுரையீரல் பாதிப்பில் இருந்து பாக் வீரர் ரிஸ்வான் வெறும் 35 மணி நேரத்தில் குணமடைந்தது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளதாக அவருக்குச் சிகிச்சை அளித்த இந்திய மருத்துவர் சஹீர் சைனுலாபுதீன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அனைவருக்கும் அதிர்ச்சி தந்த அணி என்றால் அது பாகிஸ்தான் தான்.
க்ரூப் 2இல் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் இப்படியொரு பார்மில் இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி க்ரூப் 2இல் முதல் இடத்தை பிடித்தது.

பாகிஸ்தான் ஆட்டம்
இந்தியா தொடங்கி நியூசிலாந்து, ஆப்கன் என அனைத்து அணிகளையும் துவம்சம் செய்த பாகிஸ்தான், 10 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும், இதே ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானால் வெளிப்படுத்த முடியவில்லை. கடைசி நேரத்தில் பவுலிங்கில் சொதப்ப, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

முகமது ரிஸ்வான்
இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானின் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்த ரிஸ்வான் பாகிஸ்தான் அணிக்கு வலுவான ஒரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்ற போதிலும், முகமது ரிஸ்வானை பலரும் பாராட்டினர்.ஏனென்றால், அரையிறுதி போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை அவர் ஐசியு-இல் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருந்தும் கூட அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சிகிச்சை அளித்த இந்திய மருத்துவர்
அரையிறுதி போட்டிக்கு சில நாட்களுக்கு முன் முகமது ரிஸ்வானுக்கு திடீரென தீவிர காய்ச்சல், இருமல், மார்பு இருக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக துபாயில் உள்ள மீடியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு வல்லுநரான சஹீர் சைனுலாபுதீன் என்பவர் தான் சிகிச்சை அளித்துள்ளார். முகமது ரிஸ்வானின் மன வலிமை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாக இந்திய மருத்துவரே வியந்துள்ளார்.

ஐசியு சிகிச்சை
மருத்துவமனையில் அட்மிட் ஆன ரிஸ்வான், தான் அரையிறுதியில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என மருத்துவரிடம் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இந்தியாவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு வல்லுநரான சஹீர் சைனுலாபுதீன் கூறுகையில், "முக்கியமான அரையிறுதி போட்டியில் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதில் முகமது ரிஸ்வான் மிக உறுதியாக இருந்தார், அவர் மிக விரைவில் குணமடைய அவரது மன வலிமையும் நம்பிக்கையும் தான் முக்கிய காரணமாக இருந்தது. அவர் இவ்வளவு சீக்கிரம் குணமடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

என்ன பாதிப்பு
மருத்துவமனைக்கு ரிஸ்வான் வரும்போது அவருக்கு நெஞ்சு வலி மிக மிக மோசமாக இருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரிஸ்வானுக்கு நுரையீரல் தொற்று (esophageal spasm and bronchospasm) இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் ஏற்படும் மார்பக வலி சில நிமிடங்கள் தொடங்கிப் பல மணி நேரம் வரை நீடிக்கும். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தோம்.

நம்பிக்கை
பொதுவாக இந்த பாதிப்பில் இருந்து குணமடைய 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். அரையிறுதியில் விளையாட வேண்டும் என்பது மட்டுமே அவரது இலக்காக இருந்தது. மனவலிமை, நம்பிக்கையால் ரிஸ்வான் வெறும் 35 மணி நேரத்தில் முற்றிலுமாக குணமடைந்தார். அவரின் உடல்நலத்தை ஆய்வு செய்து கடந்த புதன்கிழமை மதியம் அவரை டிஸ்சார்ஜ் செய்தோம்.

இதுவே முதல்முறை
முக்கியமான கிரிக்கெட் தொடர் நடக்கும் போது வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு வருவதை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இவ்வளவு விரைவாகக் குணமடைந்தது இதுவே முதல் முறை. அவர் அரையிறுதி போட்டியில் ஒவ்வொரு ரன்களை எடுக்கும்போதும் அது எங்களுக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications