ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்று வேலை.. வேறு வழியின்றி அடிபணிந்த கள நடுவர்கள்.. கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள்
இந்தூர்: 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்று வேலை செய்ததாக இந்திய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். புத்திசாலிதனமாக செயல்பட்டதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆதரவுக்கு வந்ததால் சண்டை உருவாகியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஏமாந்தது.
முதல் நாளில் இருந்தே அதிகப்படியான பந்து டேர்ன் ஆனதால் வெறும் 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்களை குவித்தது.

ஸ்மித் கேப்டன்சி
இந்திய களத்தில் இந்தியாவை 109 ரன்களுக்கு சுருட்டியது மட்டுமல்லாமல் 88 ரன்கள் வரை முன்னிலை பெற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதனையெல்லாம் தாண்டி கவனம் ஈர்த்தது ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சி தான். ஏனென்றால் அவர் எடுக்கும் ஒவ்வொரு டிஆர்எஸ்-ம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகவே முடிந்திருக்கிறது. இதனால் அவர் உறுதியாக 3வது நடுவருக்கு அப்பீல் செய்தாலே அவுட்டா? எனும் அளவிற்கு இருந்தது.

ஸ்மித் ஏமாற்றினாரா?
இந்நிலையில் ஸ்மித் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலிய வீரர்கள் அடிக்கடி ஸ்டம்பிங் அவுட் கேட்டுக்கொண்டே இருந்தனர். குறிப்பாக நிலைத்து நின்று விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு அடிக்கடி ஸ்டம்பிங் அப்பீல் செய்துக்கெண்டே நேரத்தை வீணடித்தனர். ஆனால் இதற்கு பின்னால் ஒரு ஐடியா உள்ளது.

என்ன ஐடியா?
பேட்டிற்கு சற்று உரசியது சென்றது போல சந்தேகம் ஏற்பட்டால் கூட உடனடியாக ஸ்டம்பிங் என அப்பீல் செய்கின்றனர். அப்படி செய்தால் 3வது நடுவருக்கு கள நடுவர்கள் செல்வார்கள். அந்த ரிவ்யூவில் முதலில் பேட்டில் பந்து உரசியதா இல்லையா என்பதை தான் அல்ட்ரா எட்ஜ் முறையில் பார்ப்பார்கள். அதன்பின்னர் தான் ஸ்டம்பிங்கை சோதனை செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் எட்ஜாகியிருந்தால் கூட விக்கெட் கிடைக்கும்.

ஏமாற்று வேலையா?
ஒருவேளை எட்ஜ் கேட்ச்-க்கு ஸ்மித் டி.ஆர்.எஸ் எடுத்தால் அந்த ரிவ்யூவை இழக்க நேரிடும். எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது ரிவ்யூவை காப்பாற்றி கொள்வதற்காக வேண்டுமென்றே ஸ்டம்பிங் என்ற முறையை பயன்படுத்தி தங்களுக்கான ரிவ்யூவையும் பார்த்துவிடுகின்றனர்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்
இதனை புரிந்துக்கொண்ட இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஏமாற்று வேளை செய்வதாக கொந்தளித்துள்ளனர். மேலும் இனி எதற்காக அப்பீல் செய்கிறார்களோ, அதனை மட்டும் தான் சோதனை செய்ய வேண்டும் எனக்கோரி வருகின்றனர். மற்றொரு புறம், ஸ்மித் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications