நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு.. ஆஸ்திரேலியாவை ஓட விடுங்க.. நவம்பர் 19 தேதியால் கதறும் ரசிகர்கள்
மும்பை: 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று நடைபெற்றது. அந்தப் போட்டி நடைபெற்று சரியாக ஓராண்டு ஆகி இருக்கும் நிலையில் இந்திய ரசிகர்கள் சமூக வலை தளங்களில்
தங்கள் இதயத்தை நொறுக்கிய இந்திய அணியின் உலகக் கோப்பை தோல்வி குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்து வாரம் முதல் துவங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதன் மூலம் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தோல்விக்கு பழி தீர்க்க முடியும் எனவும் கூறி வருகின்றனர். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.

அதற்கு முன் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்ற போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்று இருந்தது. அதே போல இந்த முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அதற்கு ஏற்ப ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் இருந்து, அரை இறுதி வரை தான் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று வந்தது. தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரே உலகக் கோப்பையில் எந்த அணியும் தான் ஆடிய பத்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை.
அப்படி எந்த அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்து இருந்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியை விடவும் இந்திய அணி வலுவானதாக பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா உலகக்கோப்பை என்றால் அத்தனை எளிதில் விட்டு விடாது என்பதால் இந்திய அணி முன்னெச்சரிக்கையாக பிட்ச்சை தயார் செய்வதில் அதிக கவனம் செலுத்தியது.
அது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி அடுத்து சேஸிங் செய்த போது டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.
அந்த நிகழ்வு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது. சரியாக அந்த சம்பவம் நடந்து ஓராண்டாகி இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறது. எனவே, இதுதான் ஆஸ்திரேலிய அணியை பழி தீர்க்க சரியான நேரம் என இந்திய ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கூறி வருகின்றனர்.
தற்போது இந்திய டெஸ்ட் அணி பலவீனமாக காட்சியளித்து வரும் நிலையிலும் இந்திய அணி உலகக்கோப்பை தோல்வியை மனதில் வைத்து இந்த டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications