லண்டன்: ஆஸ்திரேலியாவின் சேஸிங்கை மேலும் கஷ்டமாக்கியுள்ளது பின்ச்சின் அவுட். இந்தியாவின் கிடுக்கிப் பிடி பீல்டிங் வியூகத்தில் சிக்கி பின்ச் அவுட்டாகி விட்டார்.
353 என்ற இமாலய இலக்கை நோக்கி நடை போட்டு வருகிறது ஆஸ்திரேலியா. நடைபோடுகிறது என்று கூட கூற முடியாது, தவழ்ந்து கொண்டுள்ளது. அந்த அளவுக்கு பவுலிங் ஒரு பக்கம் கடுமையாக இருந்தால், மறுபக்கம் இந்தியாவின் பீல்டிங் படு கஷ்டமாக இருக்கிறது.

பவுண்டரி எடுக்கவே சிரமப்படும் அளவுக்கு இந்தியாவின் பீல்டிங் வியூகம் சிறப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 9 ஓவர்கள் வரை தடவி தடவித்தான் அடித்து வந்தது ஆஸ்திரேலியா. இந்திய பவுலிங்கை கணித்து ஆடவே இத்தனை ஓவர்களை எடுத்துக் கொண்டனர் வார்னரும், பின்ச்சும்.
10வது ஓவர் வந்துதான் அவர்களுக்கு சற்று தைரியமே வந்தது. அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அதை பிரித்து மேய்ந்து விட்டது வார்னர், பின்ச் ஜோடி. 10வது ஓவரில் 19 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. 10வது ஓவருக்குப் பிறகு ஸ்பின்னரை அறிமுகப்படுத்தினார் கோலி. குல்தீப் யாதவ் ஸ்பின் பவுலிங்கை ஆரம்பித்தார்.

இருப்பினும் வார்னர், பின்ச் ஜோடி பிரியாமல் இருந்ததால் இந்தியாவுக்கு அது உறுத்தலாகவே இருந்தது. இந்த நிலையில்தான் 14வது ஓவரில் இந்தியாவின் வலையில் சிக்கி பின்ச் அவுட்டானார். 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ஓடி பின்ச் ரன் அவுட் ஆனார்.
இவர்கள் நிலை பெற்று ஆட ஆரம்பித்து விட்டால் பின்வரிசை வீரர்களுக்கு வேலை எளிதாகும் நிலை இருந்தது. தற்போது அதில் ஒருவரை இந்தியா பிரித்து விட்டு. ஆஸ்திரேலியாவின் போக்கு அடுத்து எப்படி இருக்கப் போகிறது, இந்தியா தனது பவுலிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எப்படி அழுத்தத்தை அதிகரிக்கப் போகிறது என்பது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.