
சொதப்பல் ஆவரேஜ்
வெளிநாடுகளில் இதுவரை மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா அடித்துள்ள ரன்கள் 2,640. ஆவரேஜ் 37.71. அதிகபட்ச ஸ்கோர் 193. இது அவரது கடந்த 10 ஆண்டுகால டிராக் ரெக்கார்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் பல கேள்விகளை எழுப்பியது. அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லையோ என்ற கருத்து பரவலாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 431 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 26.93. அதிகபட்ச ஸ்கோர் 77. இதில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் விளையாடி 271 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 ரன்களும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 60 ரன்களும் எடுத்திருக்கிறார்.

ஏமாற்றம்
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மிக பொறுமையாக விளையாடினாலும், அணிக்கு ஓரளவுக்கு தேவையான பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளில் 15 ரன்கள் என மொத்தமாகவே 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. இவர் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கொண்டு 40 ரன்கள் அடித்திருந்தால் கூட, இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் 47.28 ஆவரேஜ் வைத்திருக்கும் புஜாரா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் 27.35 மட்டும் தான் டெஸ்ட் ஆவரேஜ் வைத்திருக்கிறார்.

டக் அவுட்
இந்த நிலையில் தான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தது போலவே ஏகத்துக்கும் சொதப்பியுள்ளார் புஜாரா. 16 பந்துகளை சந்தித்த புஜாரா வெறும் 4 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்த பந்திலேயே கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறியது வேறு கதை.

கன்சிஸ்டன்சி
புஜாராவைத் தொடர்ந்து ரஹானேவின் ஆட்டமும், 'நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது.. வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்னானும் தெரியாது' என்ற மோடில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடைசியாக, இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ரஹானே சதம் அடித்திருந்தார். ஆனால், அந்த சதத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி அவரது ஆட்டத்தில் கன்சிஸ்டன்சி இருக்காது. அதனால் தான் சொல்கிறேன், அவர் எப்போது அடிப்பார் என்று அவருக்கே தெரியாது.

மாற்று வீரர்கள்
இந்த கொடுமைகளுக்கு மத்தியில், கேப்டன் விராட் கோலியும், "நான் மட்டும் என்ன சும்மாவா!?" என்று போட்டிப் போட்டு சொதப்பி வருகிறார். கடந்த 2 வருடங்களில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதாவது அரைசதம் வரும். ஆனால், அதனை சதமாக கன்வெர்ட் செய்வதில் கோட்டைவிடுகிறார் கோலி. இப்படி, புஜாரா, கோலி, ரஹானே என்று இந்திய அணியின் வலிமைமிக்க மிடில் ஆர்டர் தொடர்ந்து ஆட்டம் கண்டுவரும் நிலையில், புஜாரா, ரஹானேவுக்கு மாற்று வீரர்களை கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குரல்கள் பலமாக எழத் தொங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











