மும்பை : இந்திய அணியில் இருந்து தாமாக விலகிய இஷான் கிஷன் அதன் பின் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் கூறியபடி உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருந்து வருகிறார். இதை அடுத்து அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தாமாக இந்திய அணியில் இருந்து விலகினார். அவருக்கு மனச் சோர்வு ஏற்பட்டதால் விலகியதாக பிசிசிஐ கூறி இருந்தது. ஆனால், தனக்கு தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கவில்லை என்ற கோபத்தில் தான் வெளியேறி விட்டார் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

என்னதான் அவர் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்தாலும் அவர் மீண்டும் ரஞ்சி ட்ராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் ஆடினால் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படும் என கூறினார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஆனால், இஷான் கிஷன் அவர் பேச்சை கேட்கவில்லை.
அது மட்டுமின்றி நேரடியாக 2024 ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்று இருக்கும் கிரண் மோரேவின் பயிற்சிப் பள்ளியில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இது பிசிசிஐ-யை கோபப்படுத்தி இருக்கிறது.
இந்திய அணி ஒப்பந்தத்தில் இருக்கும் இஷான் கிஷன் பிசிசிஐ மற்றும் இந்திய அணி பயிற்சியாளர் சொல்வதை கேட்காமல், ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளித்து இருப்பது தங்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதால் அவரை ஒப்பந்தத்தில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இனி ஒப்பந்தத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் உடற்தகுதி இருக்கும் பட்சத்தில் உள்ளூர் தொடர்களில் தங்கள் மாநில அணிக்காக ஆட வேண்டும் என்ற விதியை அமல்படுத்த உள்ளது பிசிசிஐ.