மும்பை : இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆஸ்திரேலிய டி20 தொடரில் கலக்கலாக பந்து வீசி இந்தியா தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அவர் வீசுவது லெக் ஸ்பின் பந்துவீச்சே இல்லை. என அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் கூறி உள்ளனர்.
அவர் தனித்துவமான பந்துவீச்சை கொண்டுள்ளார். மற்ற லெக் ஸ்பின்னர்களை போல வீசாமல், அவர் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளார் என முத்தையா முரளிதரன், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் போன்றோர் கூறி உள்ளனர். ஸ்பின் என்றால் பந்து திரும்ப வேண்டும். ஆனால், இவரது "ஸ்லைடு பால்" பந்துவீச்சில் பந்து திரும்பாமல் சறுக்கிக் கொண்டு செல்கிறது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதனாலேயே, அவர் இந்திய டி20 அணியில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இடத்தை பிடித்து அணியின் நிரந்தர ஸ்பின்னராக மாறும் நாள் தொலைவில் இல்லை. இந்திய அணியில் மிகச் சில ஸ்பின்னர்களே நீண்ட காலமாக அணியில் இடம் பிடித்து வருகிறார்கள். அவர்களை தாண்டி ஒருவர் அணியில் நுழைய வேண்டும் என்றால் அவர்களுக்கு தனித்துவமான திறமை இருக்க வேண்டும்.
அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ் என இவர்களை தாண்டி பல ஆண்டுகள் இந்திய அணியில் ஆடிய ஸ்பின்னர்கள் யாருமே இல்லை. குல்தீப் யாதவ் கூட இடையில் சில ஆண்டுகள் அணியில் இடமில்லாமல் ஒதுக்கப்பட்டு இருந்தார்.
இப்படிபட்ட சூழ்நிலையில் ரவி பிஷ்னோய் வித்தியாசமான தன் பந்துவீச்சால் டி20 அணியின் முதன்மை ஸ்பின்னராக மாறுவார் என பலரும் கூறி வருகின்றனர். லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், மற்ற ஸ்பின்னர்கள் பந்து வீசினால் பந்து பிட்ச்சில் சிறிது நேரம் நின்று பின் திரும்பும். ஆனால், இவர் பந்து வீசும் கோணம் மற்றும் பாதையின் காரணமாக பந்து ஒரு பக்கம் சாய்ந்து வருகிறது. பின் பிட்ச் ஆகி சறுக்கிக் கொண்டு செல்கிறது. பந்து பிட்ச்சில் நின்று, செல்லாததால் பேட்ஸ்மேன்களால் இவரது பந்தை கணிக்க முடியாது என்றார்.
முத்தையா முரளிதரன் கூறுகையில், "இவர் மற்ற லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் போல இல்லை. பந்தை வேகமாக வீசி, அதிகமாக சறுக்கிச் செல்ல வைக்கிறார்" என்றார். இந்த வித்தியாசமான பந்துவீச்சால் ரவி பிஷ்னோய் இந்திய அணியின் நிரந்தர ஸ்பின்னராக மாறுவாரா?