துபாய் : தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முடிவில் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)மற்றும் மேட்ச் ரெப்ரீக்கள் குறித்து விமர்சனம் செய்து கோபமாக பேசி இருந்தார். ஐசிசி விதிப்படி ரோஹித் சர்மா மீது நடவடிக்கை பாய வாய்ப்பு உள்ளதாகவும், அது பற்றி ஐசிசி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யும் எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்தது. முதல் டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்தது. அந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவடைந்தது. அந்த மைதானத்தின் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், அப்போதே பலரும் பிட்ச் சரியில்லை எனவும், அதனால் தான் போட்டி மூன்று நாட்களில் முடிந்து விட்டது எனவும் கூறினர்.

அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு இன்னும் மோசமாக ஒன்றரை நாட்களில் போட்டி முடிந்தது. வெறும் 107 ஓவர்களில் மொத்த டெஸ்ட் போட்டியும் முடிவுக்கு வந்தது, மொத்தம் 33 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இருந்தது. அனுபவ பேட்ஸ்மேன்கள் கூட ரன் குவிக்க தடுமாறினார்கள்.
இந்த நிலையில், அந்தப் போட்டி நடந்த பிட்ச் குறித்தும் கடும் விமர்சனம் எழுந்தது. அப்போது போட்டி முடிந்த உடன் செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அந்த பிட்ச் குறித்து பிரச்சனை இல்லை எனக் கூறியதோடு, பிட்ச்களுக்கு ஐசிசி அளிக்கும் மதிப்பீடு குறித்து பேசினார். அதாவது ஐசிசி ஒவ்வொரு சர்வதேச போட்டி முடிந்த உடனும் போட்டி நடந்த பிட்ச் எப்படி தயார் செய்யப்பட்டு இருந்தது என மதிப்பீடு அளிக்கும். அதில் ஒன்று முதல் ஆறு வரை மதிப்பீடு அளிக்கப்படும். 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த பிட்ச் அதில் நான்காவது மதிப்பீடான சராசரிக்கும் குறைவான தரத்தை பெற்று இருந்தது. அது குறித்தும் ரோஹித் சர்மா பேசி இருந்தார்
கேப் டவுன் போன்ற பிட்ச்களில் ஆடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதே போல இந்தியாவில் முதல் நாளே பந்து ஸ்பின் ஆனால் பிட்ச் குறித்து யாரும் பேசக் கூடாது. அப்போது அனைவரும் வாயை மூடிக் கொண்டால் தனக்கு இந்த பிட்ச் குறித்தும் எந்த பிரச்சனையும் இல்லை. ஐசிசி மற்றும் மேட்ச் ரெப்ரீக்கள் எப்படி பிட்ச்களுக்கு ரேட்டிங் கொடுக்கிறார்கள் என்பதை நிறைய பார்த்து விட்டேன். உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு கொடுத்த மதிப்பீட்டை ஒப்புக் கொள்ளவே முடியாது எனவும் ரோஹித் பேசி இருந்தார்.
ரோஹித் சர்மாவின் பேச்சு நேரடியாக ஐசிசி மற்றும் அதன் அதிகாரிகளை விமர்சனம் செய்யும் வகையில் இருந்ததால் அவர் மீது மேட்ச் ரெப்ரீ புகார் அளித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி அவருக்கு ஒழுங்கீன புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் ஒரு வீரர் அதிக புள்ளிகளை பெற்றால் அவருக்கு சில போட்டிகளில் ஆட தடையும் விதிக்கப்படும். எனவே, ரோஹித் சர்மா சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், பிசிசிஐ, ஐசிசி அமைப்பில் அதிக செல்வாக்கு கொண்டதாக இருப்பதால் ரோஹித் சர்மா விவகாரத்தை கண்டும் காணாதது போல இருக்கவும் வாய்ப்பு உள்ளது.