மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே நீக்கப்பட்டு இருக்கிறார். இதன் பின்னணியில் ரோஹித் சர்மா தான் இருக்கிறார் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அஜின்க்யா ரஹானே நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக நீடித்து வந்தார். இடையே ஃபார்ம் இல்லை எனக் கூறி சில தொடர்களில் நீக்கப்பட்டாலும், அணியில் தேர்வு செய்யப்படும் போதெல்லாம் துணை கேப்டன் பதவியும் அவருக்கே வழங்கப்பட்டது.
இடையே ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் இடம் பெற்றதால், அவருக்கும், ரஹானேவுக்கும் இடையே போட்டி நடந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக நீண்ட காலம் இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் 2023 இல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே அணியில் சேர்க்கப்பட்டார்.

அதன் பின் இந்தியா தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான அணியில் ரஹானே பெயர் இடம் பெறவில்லை. அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
டெஸ்ட் அணியில் தான் இடம் இல்லை இந்தியா ஏ அணியில் இடம் கொடுத்து தன்னை நிரூபிக்க ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என பார்த்தால் அந்த அணியில் கூட அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. மொத்தமாக இனி இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படப் போவதில்லை என்பதை குறிக்கும் வகையில் இந்தியா ஏ அணியில் கூட இடமின்றி நீக்கப்பட்டு இருக்கிறார்.
ரோஹித் சர்மா அணித் தேர்வின் போது ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என தேர்வுக் குழுவிடம் கூறியதாகவும், ஸ்ரேயாஸ் அணிக்கு வந்ததால் ரஹானேவை நீக்கி விடுமாறு கூறியதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. டெஸ்ட் அணியில் இருந்து நீக்க சொன்னால், தேர்வுக் குழு அவரை இந்தியா ஏ அணியில் இருந்தும் கூட நீக்கி இருக்கிறது.