சஞ்சு சாம்சனுக்கு அடித்த ஜாக்பாட்.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்.. 1 கோடி ஒப்பந்தம்.. காரணமே இதுதான்
மும்பை : சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கிரேடு "சி"யில் இடம் பெற்று இருந்தார். ஆனால், இந்த முறை அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்காது என்றே பலரும் எண்ணிய நிலையில் அவருக்கு அதே கிரேடு "சி" ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது பிசிசிஐ.
சஞ்சு சாம்சனை எப்போதும் அணித் தேர்வில் ஓரங்கட்டி வரும் பிசிசிஐ, ஒப்பந்த விஷயத்தில் அப்படியே மாற்றி முடிவு எடுக்க என்ன காரணம்?

இதன் பின்னணியாக தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரை குறிப்பிடுகின்றனர் இது குறித்து அறிந்த கிரிக்கெட் விமர்சகர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முக்கியத்துவம் அற்றதாக இருந்தது. அதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது என்பதே அவரை ஓரங்கட்டும் செயல் தான் என அப்போது கடும் விமர்சனம் கிளம்பியது.
ஆனால், அந்த தொடரில் இரண்டாவது போட்டியில் சொதப்பிய போதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். கடும் அழுத்தத்துக்கு நடுவே அவர் சதம் அடித்து இருந்தார். அதுவே அவரது முதல் சர்வதேச சதம் ஆகும்.
அந்த செயல்பாட்டை பார்த்து பிசிசிஐ தேர்வுக் குழு ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பல முறை வாய்ப்பு பெற்றும் அதில் தன் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ளாத சஞ்சு சாம்சன் இந்த முறை சிறப்பாக சதம் அடித்து தன் திறமையை நிரூபித்தார். இதை அடுத்து அவரை முற்றிலுமாக ஒதுக்காமல் பிசிசிஐ கிரேடு "சி" ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.
மறுபுறம் 2023 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி 530 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்காமல், உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருந்ததால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications