எல்லை மீறிய பிசிசிஐ.. வலியில் துடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. வெளியான உண்மை.. விளாசும் ரசிகர்கள்
மும்பை : இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கு பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பேட்டிங் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவர் நீக்கப்பட்டு இருந்தார்.
அவரை உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் ஆடுமாறு இந்திய அணி நிர்வாகம் கூறியது. ஆனால், அவர் முதுகு வலி இருப்பதாகக் கூறி அந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதை அடுத்து அவரது பிசிசிஐ ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது பிசிசிஐ. மேலும், ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியே இல்லாமல் பொய்யாக வலி இருப்பதாக சொல்வதாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறி இருந்தனர்.

தனது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரஞ்சி கோப்பை தொடரில் தனது அணியான மும்பை அணியில் இணைந்து ரஞ்சி கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்றார். இறுதிப் போட்டியில் 95 ரன்கள் அடித்து தன் ஃபார்மை நிரூபித்து இருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் அவர் முதுகு வலியால் துடித்தார். முதல் இன்னிங்ஸ் ஃபீல்டிங்கின் போது அவர் மூன்று மணி நேரம் களத்திற்கு வரவில்லை.
அதே போல, போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் அவர் களத்திற்கு வரவில்லை. அவருக்கு வலி இருப்பதால் அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று ஆலோசனை பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அதே தேசிய கிரிக்கெட் அகாடமி தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த பிரச்னையும் இல்லை என அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தான் அவர் வலி இல்லாமலே ரஞ்சி கோப்பை தொடரில் ஆடாமல் இருக்கிறார் என்ற கோபத்தில் பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்து இருந்தது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த ஆண்டு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதை அடுத்தே அவருக்கு அவ்வப்போது முதுகு வலி ஏற்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு வலி இருப்பது வெளியே தெரிந்த நிலையில், ரசிகர்கள் பிசிசிஐ-யை விளாசி வருகிறார்கள். வலியில் இருக்கும் வீரரை ஆதரிக்காமல் அவரை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு அழுத்தம் கொடுத்து கொடுமைப்படுத்தியதாக பிசிசிஐ மீது பலரும் குற்றம் சுமத்தி உள்ளனர். பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications