செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் மூத்த வீரர்கள் யாரும் பங்கு பெறப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் போன்ற ஐபிஎல் கேப்டன்கள் அணியில் இருந்தும் அவர்களுக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.
டி20 உலக கோப்பையில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. எனவே, உலகக்கோப்பை தொடரில் மாற்று வீரர்களாக போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு இன்றி இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் ஜிம்பாவே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

அவர்களுடன் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் பலரும் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டம் ஆடிய துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரியான் பராக், சன்ரைசர்ஸ் அணியின் உள்ளூர் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பேட்ஸ்மேன்களாக அணியில் இடம் பெற்று உள்ளனர். துருவ் ஜுரேல், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளனர்.
கலீல் அஹ்மது, துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டு ஜிம்பாப்வே செல்ல உள்ளனர்.
இந்த அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பிசிசிஐ, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவிடம் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்க விருப்பமா? எனக் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் அந்த தொடரில் பங்கேற்க விரும்பவில்லை எனவும், ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பங்கேற்றதால் ஓய்வு பெற விரும்புவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லை இந்திய அணியின் கேப்டனாக நியமித்து உள்ளது பிசிசிஐ. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சனும் ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம்பெற உள்ள நிலையில் அவரை கேப்டனாக அறிவிக்காமல், சுப்மன் கில்லை அறிவித்து இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர் சஞ்சு சாம்சன். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டு சீசன்களாக பிளே ஆஃப் சுற்று வரை அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், அவரை புறக்கணித்து இருக்கிறது பிசிசிஐ. அதே போல ருதுராஜ் கெய்க்வாட் சுப்மன் கில் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.