மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. 68.5 சதவீதத்துடன் இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி தான் செல்ல முடியும். தற்போது 2023-25 சைக்கிளில் பாதி கட்டத்தை தாண்டியுள்ள நிலையில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

இனி இந்தியா விளையாடப் போகும் தொடர் எவ்வளவு? அதில் இந்தியா எவ்வளவு வெற்றி பெற வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி இன்னும் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் தற்போதைய நிலவரப்படி இந்திய அணி குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆவது வெல்ல வேண்டும். அதிகபட்சமாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும்.
இதில் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டியும் இந்தியாவில் தான் நடைபெறுகிறது என்பதால் இதில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆனால் பிரச்சனையே எஞ்சி இருக்கும் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் தான். ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 5 போட்டிகளில் விளையாட இருக்கிறது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது.
இதனால், இம்முறை இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியா அலைகிறது.இந்த தொடரில் இந்திய அணி டிரா மற்றும் வெற்றியை பெற வேண்டும். குறைந்தது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது இந்தியா வென்றால் மட்டுமே உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட முடியும்.