1,441 நாட்கள்.. சதமடிக்க முடியாமல் திணறும் இந்திய "சுவர்".. எப்போது முடியும் புஜாராவின் போராட்டம்?
டாக்கா: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய வீரர் புஜாரா 1,441 நாட்களாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்குவது தான் ஆகப்பெரிய சவால். ஏனென்றால் தொடக்க வீரர் எப்போது ஆட்டமிழப்பார் என்பது யாருக்கும் தெரியாது. தொடக்க வீரர் பேட் கட்டும்போதே மூன்றாவது வீரரும் பேட் கட்டி தயாராக இருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும் கடந்து புது பந்தை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதனால் தான் விராட் கோலியை விடவும், ஸ்டீவ் ஸ்மித் அதிகமாக கொண்டாடப்படுகிறார். முன்னதாக சச்சினை விடவும் டிராவிட் அதிகமாக கொண்டாடப்பட்டார்.

1,441 நாட்கள்
டிராவிட்டுக்கு பின் அந்த இடத்திற்கு வந்த புஜாரா, அப்படியே அவரின் நகழாக இந்திய அணியை காத்து வருகிறார் என்றே கூறலாம். இன்னும் சொல்லப் போனால், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா அடுத்தடுத்து இரு டெஸ்ட் தொடர்களை வெல்வதற்கு புஜாராவின் ஆட்டம் தான் முக்கியமான காரணம். ஆனால் ஜாம்பவான் வீரரான புஜாரா டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசி 1,441 நாட்கள் ஆகிவிட்டது.

சுமார் 4 ஆண்டுகள்
கடைசியாக 2019ம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக புஜாரா சதம் விளாசி இருந்தார். அதன் பின்னர் சுமார் 4 ஆண்டுகளாக புஜாரா சதம் அடித்ததே இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் புஜாரா 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் 27.87 சராசரியுடன் 1,366 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் புஜாராவின் பழைய கால பேட்டிங் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருந்தது.

நங்கூரமாய் நின்ற புஜாரா
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால் ஒருநாள் தொடரை போல் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியடைய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் ஒரு பக்கம் நங்கூரம் பாய்ச்சி புஜாரா நிற்க, இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் பட்டாசாக வெடித்து ரன்களை சேர்த்தார்.

34வது அரைசதம்
சிறப்பாக விளையாடிய புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34வது அரைசத்தை விளாசினார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் நீண்ட காலமாக கரும்புள்ளியாக இருக்கும் சதத்தை, புஜாரா விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

90 ரன்களில் அவுட்
ஆனால் 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து, வங்கதேசத்தின் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் விராட் கோலியை போலவே புஜாராவும் சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். அடுத்தடுத்து இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்க உள்ள நிலையில், விரைவில் புஜாரா சதமடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications