இன்றும் ஒரு அக்கப்போர்.. இலங்கை வீரருடன் இந்திய வீரர்கள் உரசல்! நாட்டாமை செய்த அஸ்வின்!
கொழும்பு: இந்திய வீரர்களுடன், இலங்கை வீரர் குஷால் பெரேரே வாக்குவாதம் செய்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர் அஸ்வின் குறுக்கிட்டு பெரேராவை சமாதானம் செய்து வைத்தார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின், கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 386 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இலங்கையின் கேப்டன் மேத்யூஸ் மற்றும், குஷால் பெரேரா ஜோடி விக்கெட்டுகளை விழ விடாமல் தடுத்தாடியது.

இந்த ஜோடி 135 ரன்களை குவித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியபோது, அஸ்வின் பந்து வீச்சை ரிவர்ஸ் ஸ்வீப் வகை ஷாட் அடிக்க முயன்ற பெரேரா, ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் ரோகித் ஷர்மா, கையில் பந்தை வைத்துக்கொண்டு, தவளைபோல தவளைபோல துள்ளியபடி மகிழ்ச்சியுடன் வந்தார். இதைப்பார்த்த, இந்திய வீரர்களும் சிரித்து மகிழ்ச்சி கோஷமிடவே, பெரேரா கோபத்தில் கண்டபடி பேச ஆரம்பித்தார்.
இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அஸ்வின் வந்து தலையிட்டு பெரேராவை வெளியே போகும்படி சைகை காட்டினார். மீண்டும் பெரேரா அதுபோலவே பேசியபோது, முதுகில் தட்டிக்கொடுத்து அவரை தள்ளிவிட்டார் அஸ்வின்.
இதனால் சிறிது நேரம், பரபரப்பு நிலவியது. நேற்றைய போட்டியின்போது இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் இலங்கை வீரர் பிரசாத் நடுவே ரகளை நடந்து அது பெவிலியன் வரை தொடர்ந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications