பெங்களூரு: ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கான ஒரு வாரப் பயிற்சி முகாமை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கண்டிப்புடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், நேபால் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்தத் தொடர் ஹைபிரிட் மாடலில் நடப்பதால், பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

இதில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், இந்தத் தொடர் மீது ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளில் விளையாடும் சூழலும் உருவாகியுள்ளது. இதனால் இந்திய அணி மீதான அழுத்தமும் கூடியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஆசிய கோப்பைத் தொடருக்கு தயாராகும் வகையில் ஒரு வார பயிற்சி முகாமை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் பயிற்சி முகாமை தொடங்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளார். இதனால் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து வீரர்கள் கண்டிப்பாக பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணி புதிய கேப்டன் தலைமையில் விளையாடும் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன் கேப்டனாக செயல்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். அதன்பின் எந்த பயிற்சி முகாமும் நடக்கவில்லை. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி, பிசிசிஐ மீண்டும் பயிற்சி முகாமை நடத்தும் திட்டத்திற்கு மாறியுள்ளது. இதனால் ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.