மும்பை: உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதில் செப்.22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு முதல் போட்டி மொஹாலியில் நடக்கவுள்ளது.

இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி செப்.24ஆம் தேதி இந்தூரிலும், 3வது ஒருநாள் போட்டி செப்.27ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரு போட்டிகளுக்கு நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேஎல் ராகுல் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய அணியில் தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆசியப் போட்டிகள் அணிக்கு தலைமையேற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்த தொடரிலும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடிய அத்தனை ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் சாஹல் விளையாடினார். அண்மை காலங்களில் சாஹலின் ஃபார்ம் மோசமாக அமைந்தாலும், இந்திய ஆடுகளங்களில் சாஹலின் அனுபவம் அபரிவிதமானது.
இந்த அணியிலும் தேர்வு செய்யப்படாததால், சாஹல் இனி இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது எளிதல்ல என்று பார்க்கப்படுகிறது. ஐசிசி தொடர்கள் என்றாலே சாஹலை இந்திய அணி ஊறுகாய் போல் பயன்படுத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இவருக்கு பதில் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்து பின்னடைவை சந்தித்தது. அதன்பின் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்தும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இதனால் சாஹலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.