“அஸ்வின் டெஸ்ட் கேப்டன் ஆகவேக்கூடாது” அந்த விஷயத்தில் பிரச்சினை உள்ளது.. கோச்சே கூறிய காரணம்!
சென்னை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வியே அனைவரின் மனதிலும் உள்ளது.
ஒரு சிலர் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயரை அடுத்த டெஸ்ட் கேப்டனாக பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஒரு பந்துவீச்சு பயிற்சியாளரே இப்படி கூறுகிறாரே என்று ஆச்சரியமாக உள்ளது அல்லவா..?? அதற்கு அவர் அளித்த காரணத்தையும் தற்போது காணலாம்.

கேப்டன் கலாச்சாரம்
கேப்டனாக தோனி வெற்றி பெற்றதை அடுத்து, விக்கெட் கீப்பர்களை கேப்டனாக நியமிக்கும் கலாச்சாரம் உலகம் முழுவதும் வந்தது.தற்போது தோனி சென்றதும், அந்த கலாச்சாரமும் ஓய்ந்தது. இந்த நிலையில், வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸை, டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. அவரும் கேப்டனாக பொறுப்பேற்று ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் வென்றார்.

பந்துவீச்சாளர்கள் ஆர்வம்
இதனால் பந்துவீச்சாளர்களை கேப்டனாக நியமிக்கும் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று இந்தியாவிலும் கோரிக்கை எழுந்தது. கும்ப்ளே டெஸ்ட் கேப்டனாக இருந்தது போல், அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதே போன்று பும்ரா, முகமது ஷமி ஆகியோர் டெஸ்ட் கேப்டனாக பணி செய்ய தயார் என்று தெரிவித்தார்.

அஸ்வின் வேண்டாம்
இந்த நிலையில் தான், அஸ்வினை கேப்டனாகவே நியமிக்க கூடாது என்று முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். வெளிநாடு தொடர்களில் அஸ்வினை விட ஜடேஜா தான் அணிக்கு தேவைப்படுவார். இதனால் வெளிநாட்டு தொடருக்கு என்று தனி கேப்டனை நியமிக்க முடியாது என்று பாரத் அருண் கூறினார்.
Recommended Video

பும்ராவுக்கு நோ
இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கும் கேப்டன் பணி சரி வராது. கேப்டன் என்றால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஆனால் பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களால் அந்த சுமையை தாங்க முடியாது. அவர்களது உடல் தகுதியும் ஒத்துழைக்காது. தொடருக்கு நடுவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எப்போதுமே பேட்ஸ்மேன் தான் கேப்டனுக்கு தகுதியான நபர்கள் என்று பாரத் அருண் கூறினார்.


Click it and Unblock the Notifications