"அடுத்த போட்டி இருக்கு.. எங்க கம்பேக் எப்படி இருக்கும் பாருங்க" ஸ்ரேயாஸ் கொடுத்த நம்பிக்கை!
ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்தப் போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என்று ஸ்ரேயாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்து பகுதியில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

ஸ்ரேயாஸ் அசத்தல்
இதனால் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி, . 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 80, தவான் 72, சுப்மன் மில் 50, சுந்தர் 37* ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி, ஃபெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நியூசிலாந்து வெற்றி
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 4வது விக்கெட்டிற்கு கூட்டணி அமைத்த கேப்டன் வில்லியம்சன் - டாம் லேதம் 221 ரன்களுக்கு சேர்த்தனர். லேதம் 104 பந்துகளில் 145 ரன்களும், வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 47.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

கம்பேக் கொடுப்போம்
இதுகுறித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் கூறுகையில், நியூசிலாந்து அணிக்கு நல்ல இலக்கை எங்களால் நிர்ணயிக்க முடிந்தது. ஆனால் சில விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் இது கற்றலுக்கான களம். சுயபரிசோதனை செய்து, அடுத்தப் போட்டியில் சிறந்த கம்பேக்கை கொடுப்போம்.

சாதாரணம் அல்ல
இந்திய மண்ணில் இருந்து நேரடியாக புறப்பட்டு, நியூசிலாந்தில் விளையாடுவது எளிதானது அல்ல. சூழலுக்கு தகுந்தாற்போல் தகவமைத்துக் கொண்டு, மன உறுதியுடன் விளையாட வேண்டும். நியூசிலாந்து அணியில் லேதம் மற்றும் வில்லியம்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களை அடிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தனர். அவர்களின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மொத்தமாக மாற்றியது.

அச்சமில்லை
ஒருவேளை அவர்களில் ஒருவரை நாங்கள் விரைவாக வீழ்த்தி இருந்தால், முடிவில் மாற்றம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மோசமான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினர். அவர்களின் ஆட்டத்தில் எந்த அச்சமுமில்லை. அதுதான் அவர்களின் வெற்றிக்கு மிகமுக்கிய ஒன்றாக அமைந்தது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications