மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கடந்த முறை இறுதிப்போட்டி வரை வந்த இங்கிலாந்தும் நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன.
இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிக்கும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கு பெற ஐசிசி திட்டமிட்டு அட்டவணை ஒன்றை தயாரித்தது.

பொதுவாக உலக கோப்பை தொடருக்கு முன்பு இது போன்ற பயிற்சி ஆட்டங்களில் வீரர்கள் பங்கேற்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். இதன் மூலம் அணியை தேர்வு செய்வது, வீரர்களுக்கு தன்னம்பிக்கை பெறுவது தங்களிடம் என்ன குறை இருக்கிறது போன்ற விஷயங்களை பயிற்சி ஆட்டம் மூலம் ஒவ்வொரு அணியும் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்திய அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்ள இருந்தது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொண்ட நிலையில் இங்கிலாந்தையும் வீழ்த்தியிருந்தால் அது வீரர்களின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்திருக்கும்.
ஆனால் அந்த போட்டி மழையால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. சரி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே என நினைத்த வீரர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராஜ் காட்டில் விளையாடிவிட்ட இந்திய அணி அங்கிருந்து நேரடியாக கௌஹாத்திக்கு புறப்பட்டு சென்றது .
அங்கே போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இந்திய அணி வந்து இரண்டாவது பயிற்சி ஆட்டத்திற்கு தயாரானது. ஆனால் இன்றும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.இதனால் இந்திய அணி சுமார் 615 கிலோ மீட்டர் அலைந்தும் ஒரு பந்தை கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கும். ஏனென்றால் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் எந்த அலைச்சலும் இன்றி ஒரு பயிற்சி முகாமிலாவது இந்திய அணி இந்த நேரத்தை பயன்படுத்தி இருக்கும்.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒரு வாரத்தில் தற்போது 6 ஆயிரம் கிலோ மீட்டர் அலைந்து இருப்பதால் அது வீரர்களுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் அயற்சியை கொடுத்திருக்கும்.மேலும் உலகக்கோப்பைக்கு முன்பு கொஞ்சம் ஓய்வு இருந்திருந்தால் அது வீரர்களை இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கும். நல்லவேளையாக இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியை இன்னும் நான்கு நாட்கள் இடைவெளியில் விளையாடப் போகிறது.
அதுவும் அந்த போட்டி சென்னையில்தான் நடக்கிறது. இதனால் திருவனந்தபுரத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் சென்னை வரும் இந்திய அணி இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு பயிற்சியில் ஈடுபட்டால் கூட தெளிவாகிவிடும். எனினும் உலக கோப்பைக்கு முன்பு இவ்வாறு ஓய்வே இல்லாமல் இந்திய வீரர்களை அலைய வைத்தது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.