இந்திய அணிக்கு அடுத்தடுத்த பின்னடைவு.. அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் விலகல்
மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூரியன்ஷ் ஷெட்கே அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, நிதிஷ் குமார் ரெட்டிக்கு இடது தொடை தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரது எம்ஆர்ஐ பரிசோதனையில் தொடை தசையில் வீக்கம் மற்றும் தசைநார் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு செயல்பாட்டு மையத்தில் அவர் தீவிர சிகிச்சை பெற உள்ளார். குணமடைய குறைந்தபட்சம் 4 வாரங்கள் வரை ஆகும் என்பதால், அவர் தற்போதைய தொடர்களை முழுமையாக தவறவிட்டுள்ளார். ஏற்கனவே ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக விலகியுள்ளதால், நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்று வீரராக சூரியன்ஷ் ஷெட்கே அணியில் சேர்க்கப்பட உள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஏ தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூரியன்ஷ், 5 போட்டிகளில் விளையாடி 147 ரன்கள் குவித்து அசத்தினார். பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இவருக்கு சர்வதேச அணியில் விளையாட நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.
இதற்கிடையில், ஐபிஎல் 2026 தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரும் தற்போது பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொருபுறம், தொடை தசைநார் காயத்தில் இருந்து மீண்டு வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இசிபி-யின் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் காயத்தால் விலகி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பல முக்கிய வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருக்கும் நிலையில்15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் சர்வதேச அறிமுகம் பெற்று விளையாட உள்ளது ரசிகர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
