மும்பை: இந்தியாவின் அடுத்த ராகுல் டிராவிட் என அழைக்கப்பட்ட புஜாராவுக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இந்திய அணி அடுத்து ஆட உள்ள வங்கதேச டெஸ்ட் தொடரிலும், அதற்கு முன் வீரர்கள் தேர்வுக்காக நடைபெற உள்ள துலீப் ட்ராபி தொடரிலும் கூட புஜாராவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவர் இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்தின் கவுன்டி அணியான சசக்ஸ்-இல் வெளிநாட்டு ஒப்பந்த வீரராக புஜாரா விளையாடினார். அவரது பங்களிப்பால் அந்த அணி ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை புஜாரா கவுன்டி தொடரில் 501 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது சராசரி 62 ஆக உள்ளது. இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.

இத்தனை சிறப்பாக செயல்பட்ட போதும் அவரை சசக்ஸ் நிர்வாகம் அணியில் இருந்து நீக்கி இருக்கிறது. சில போட்டிகளில் சசக்ஸ் அணியின் கேப்டனாகவும் கூட செயல்பட்ட புஜாரா இங்கிலாந்து வீரராகவே மாறிவிட்டார் என பலரும் கிண்டல் செய்யும் அளவுக்கு சசக்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரரான டேனியல் ஹூக்ஸ்-ஐ தங்கள் அணியில் சேர்க்க வேண்டி புஜாராவை நீக்கி இருக்கிறது சசக்ஸ்.
இங்கிலாந்து கவுன்டி அணிகள் நான்கு வெளிநாட்டு வீரர்களை தங்கள் அணிகளில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம், ஒரு போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் விளையாட வைக்கலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. அதனை கருத்தில் கொண்டு டேனியல் ஹூக்ஸ்-க்காக புஜாராவை நீக்கி இருக்கிறது சசக்ஸ் நிர்வாகம்.
டேனியல் ஹூக்ஸ் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளிலும் சசக்ஸ் அணிக்காக விளையாடுவார் என கூறப்படுகிறது. இந்த முடிவை எடுப்பதற்கு தாங்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், புஜாரா தனது அனுபவத்தை சசக்ஸ் வீரர்களுக்கு கடத்தியதாகவும், பல இளம் பேட்ஸ்மேன்களுக்கு அவர் உதவியதாகவும் கூறி அவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறது சசக்ஸ் அணி நிர்வாகம். தற்போது புஜாரா வேறு கவுன்டி அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது.