சாய் சுதர்சனுக்கு ஒரு நியாயம்.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு நியாயமா? அஜித் அகர்கரை விளாசிய முகமது கைஃப்
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமளிக்கப்படவில்லை. அதே சமயம், முதல் முறையாக சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். இது குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
சாய் சுதர்சனை ஐபிஎல் செயல்பாட்டை வைத்து தேர்வுக் குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் இதற்கு முன் இந்திய அணிக்காகச் சிறப்பாக விளையாடியிருக்கும் நிலையிலும், அவரைத் தேர்வு செய்யவில்லை என முகமது கைஃப் விமர்சித்துள்ளார். மேலும், உள்நாட்டுப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக ரன் குவித்த நிலையிலும் அதையும் அவர்கள் பார்க்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

2024-25 ரஞ்சி டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 7 இன்னிங்ஸ்களில் 480 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது சராசரி 68.57 என்பதாக உள்ளது. மேலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அப்போது அவர் 243 ரன்கள் எடுத்திருந்தார்.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 500 ரன்களுக்கு அதிகமாக எடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவரது கேப்டன்ஷியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இப்படி ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து முகமது கைஃப் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முகமது கைஃப் இதுபற்றிக் கூறுகையில், "சாய் சுதர்சன் அற்புதமான வீரர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு நல்ல ஐபிஎல் சீசனை வைத்திருந்ததால் அடுத்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட காலமாகவே நன்றாக விளையாடி வருகிறார்."
"2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் 550 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தற்போது 500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். அந்த அணியின் கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். ஒரு பக்கம் ஒரு வீரரை (சாய் சுதர்சனை) டி20 செயல்பாட்டை வைத்து தேர்வு செய்கிறீர்கள், மற்றொரு பக்கம் இன்னொரு வீரரை (ஸ்ரேயாஸ் ஐயரை) வேறு அளவீட்டை வைத்துப் பார்க்கிறீர்கள்," எனத் தேர்வுக் குழுவினரை விமர்சித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications