Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எவ்ளோ கோடி வேணாலும் தர்றோம்.. கையெழுத்து போடுங்க” உலகக்கோப்பையால் இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்

மும்பை: 2025 மகளிர் உலகக்கோப்பையை வென்றதை அடுத்து இந்திய வீராங்கனைகளின் பிராண்ட் மதிப்பு (Brand Value) விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக உலகக்கோப்பைக்கு மிக அருகில் வந்து, இறுதி நேரத்தில் வெற்றியைத் தவறவிட்டு மிகுந்த வேதனைகளைச் சந்தித்த இந்திய மகளிர் அணிக்கு, இந்த உலகக்கோப்பை வெற்றி, கடந்த கால காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இதுவரை கண்டிராத புதிய வர்த்தக வாய்ப்புகளையும் திறந்துவிட்டுள்ளது.

"எவ்ளோ கோடி வேணாலும் தர்றோம்.. கையெழுத்து போடுங்க" என முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் விளம்பர ஏஜென்சிகளை முற்றுகையிட்டு உள்ளன. முதற்கட்ட தகவலின்படி, உலகக்கோப்பையை வென்ற சில மணி நேரங்களிலேயே, இந்திய வீராங்கனைகளின் விளம்பர ஒப்பந்தங்களுக்கான கட்டணம் 25% முதல் 100% வரை உயர்ந்துள்ளது. பல நிறுவனங்களும் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்ய போட்டி போடத் துவங்கி உள்ளன.

Indian Women Cricketers Harmanpreet Mandhana Jemima Brand Value Skyrockets after World Cup win

குவியும் விளம்பர வாய்ப்புகள்:

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா போன்ற வீராங்கனைகளின் சமூக வலைதளப் பக்கங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்துள்ளது. சிலருக்கு இந்த எண்ணிக்கை இருமடங்கு அல்லது மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இவர்களைத் தங்கள் பிராண்ட் தூதர்களாக நியமிக்கப் போட்டி போட்டு வருகின்றன.

"வெற்றி பெற்ற அடுத்த கணமே, புதிய விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பழைய ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பது எனப் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே, உள்ள ஒப்பந்தங்களின் தொகை 25-30% வரை உயர்த்திக் கேட்கப்படுகிறது" என்று பிரபலங்களின் விளம்பர ஒப்பந்தங்களைக் கையாளும் பேஸ்லைன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துஹின் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

100% உயர்ந்த ஜெமிமாவின் மதிப்பு:

குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸின் பிராண்ட் மதிப்பு 100% வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்த உடனேயே, எங்களுக்கு அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன. தற்போது 10 முதல் 12 வெவ்வேறு துறை சார்ந்த பிராண்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்கிறார் ஜெமிமாவின் வர்த்தகத்தைக் கையாளும் JSW (ஜே.எஸ்.டபுள்யூ) ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி கரண் யாதவ்.

இந்த வெற்றிக்குப் பிறகு, ஜெமிமாவின் ஒரு விளம்பர ஒப்பந்தத்திற்கான கட்டணம், ஒப்பந்தத்தின் காலம் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, ரூ.75 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனா முதல் ஹர்மன்ப்ரீத் கௌர் வரை:

இந்தியாவிலேயே விளம்பரத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, ஏற்கனவே Nike, Hyundai, SBI, Gulf Oil போன்ற 16 முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதராக உள்ளார். ஒரு பிராண்டிற்கு அவர் ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் அவரது மதிப்பும் மேலும் உயர்ந்துள்ளது.

இதனிடையே, உலகக்கோப்பையை வென்ற 24 மணி நேரத்திற்குள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான Omaxe Ltd-(ஓமேக்ஸ்) இன் பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம், மகளிர் கிரிக்கெட்டின் மீது நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பிராண்டுகளின் கொண்டாட்டம்:

இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, முன்னணி பிராண்டுகள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்தன. அதாவது மகளிர் அணியின் உலகக்கோப்பை வெற்றியை வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள முயன்றன.

Puma (பூமா): ஹர்மன்ப்ரீத் கௌர், தீப்தி ஷர்மா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ள Puma நிறுவனம், "ஒவ்வொரு சந்தேகம், ஒவ்வொரு தலைப்புச் செய்தி, ஒவ்வொரு இதய வலியும் எரிக்கப்பட்டது. ஹர்மன்ப்ரீத் கௌர் உலகக்கோப்பை வென்ற கேப்டன்" என்று பதிவிட்டுள்ளது.

Pepsi (பெப்ஸி): "ஒரு நீல நிற அணியிலிருந்து மற்றொரு நீல நிற அணிக்கு," என்று வாழ்த்தி இருந்தது.

Swiggy Instamart (ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்): "ராணிகள் சிறப்பாக விளையாடியதால், மைதானத்தில் யாராலும் அமைதியாக அமர முடியவில்லை" எனப் புகழ்ந்துள்ளது.

Surf Excel (சர்ஃப் எக்ஸல்): "தடம் பதிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த மைதானம் சொந்தம்" என்று கூறி, இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்பே முழுப்பக்க விளம்பரத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது.

இந்த வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உரிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இந்த அங்கீகாரம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்து, நீண்ட காலத்திற்கு நிலைக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Tuesday, November 4, 2025, 13:07 [IST]
Other articles published on Nov 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+