துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வரும் செப்டம்பர் 11 முதல் 16 வரை அங்கே ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய அணி.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் நீண்ட நெடிய தொடராக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளோடு சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் அந்தந்த நாடுகளில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும்.

இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தற்போது ஆறு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இலங்கை இன்னும் மோசமாக எந்த புள்ளிகளும் பெறாமல் இருக்கிறது.
இந்த நிலையில், இலங்கையை அதன் சொந்த மண்ணில் சந்திக்க உள்ள இந்திய மகளிர் அணி, மூன்று போட்டிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேற ஆவலாக இருக்கிறது.
இங்கிலாந்து கியா சூப்பர் லீக் டி20 தொடரில் கலக்கிய ஸ்மிருதி மந்தனா, அனுபவ ஜூலன் கோஸ்வாமி, சூப்பர் கேப்டன் மிதாலி ராஜ் என இந்திய அணி வலுவாக உள்ளது.
செப்டம்பர் 11 - முதல் போட்டி, காலே
செப்டம்பர் 13 - இரண்டாம் போட்டி, காலே
செப்டம்பர் 16 - மூன்றாம் போட்டி, காட்டுநாயகே