புதுடெல்லி: இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் , தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களத்திற்குத் திரும்பும் அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் (LA 2028) நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்று சூளுரைத்துள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட கண்ணீர் சோகத்திற்குப் பிறகு, மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக அறிவித்த வினேஷ், தற்போது "எனக்குள் இருக்கும் நெருப்பு இன்னும் அணையவில்லை" என்று ஆக்ரோஷமாகத் திரும்ப வந்துள்ளார்.

2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி வரலாறு படைத்தார் வினேஷ். தங்கப்பதக்கத்திற்காக அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டர்பிரான்ட் உடன் மோதவிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் போட்டிக்குக் காலையில் நடந்த எடை சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட எடையை விடச் சில கிராம்கள் கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கையில் கிடைத்த பதக்கம் நழுவிய விரக்தியில், அவர் மல்யுத்தத்திலிருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், 18 மாத இடைவெளிக்குப் பிறகு தனது 'எக்ஸ்' (X) தளத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பாரிஸ் ஒலிம்பிக் தான் உங்களின் முடிவா? என்று மக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நீண்ட காலமாக என்னிடம் அதற்கான பதில் இல்லை. அந்த அழுத்தத்திலிருந்தும், எதிர்பார்ப்புகளிலிருந்தும், ஏன் எனது சொந்த லட்சியங்களிலிருந்தும் கூட நான் விலகி இருக்க விரும்பினேன். பல வருடங்களுக்குப் பிறகு நான் சுதந்திரமாக மூச்சுவிட விரும்பினேன்.
எனது பயணத்தின் வலி, ஏற்ற இறக்கங்கள், தியாகங்கள் ஆகியவற்றை உணர எனக்கு நேரம் தேவைப்பட்டது. அந்த சுயபரிசோதனையில் நான் ஒரு உண்மையை கண்டறிந்தேன். நான் இன்னும் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். அந்த அமைதியில் நான் மறந்த ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன் - 'எனக்குள் இருந்த அந்த நெருப்பு இன்னும் அணையவில்லை'. அது சோர்வுக்கு அடியில் புதைந்து கிடந்தது," என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஒழுக்கம், பயிற்சி, போராட்டம்.. இவை அனைத்தும் என் ரத்தத்தில் ஊறிப்போனவை. நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், என் ஒரு பகுதி மல்யுத்த களத்திலேயே தங்கியிருந்தது. அதனால் இதோ.. பயமில்லாத இதயத்துடனும், துவளாத ஆன்மாவுடனும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை நோக்கி அடியெடுத்து வைக்கிறேன். இம்முறை நான் தனியாக வரவில்லை. எனது மகன் எனது அணியில் இணைகிறான். அவன்தான் எனது மிகப்பெரிய உத்வேகம்," என்று தனது மீள்வருகை அறிவிப்பை வெளியிட்டார்.
வினேஷ் போகத் ஏற்கனவே உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம் (2018), ஒரு வெண்கலம் (2014) மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் மூன்று தங்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸில் தவறவிட்ட தங்கத்தை, 2028-ல் அமெரிக்க மண்ணில் வென்று காட்டுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.