லக்னோ: பெற்றோருக்கு இந்திய அணி ஜெர்சியை அணிவித்து, அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இளம் வீரர் ரிங்கு சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்களை விளாசி இருந்தார். சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை, ஆட்டோ ஓட்டும் அண்ணன் என்று ஏழ்மையில் இருந்து கிரிக்கெட்டின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தமாக கருத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்திற்கு பணமில்லாதவர்களாலும் சென்றடைய முடியும் என்று ரிங்கு சிங் நிரூபித்துள்ளார். அண்மையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கி ஆடிய முதல் போட்டியிலேயே 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அசத்தினார்.
15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே விளாசியிருந்த ரிங்கு, கடைசி 6 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை சரியான நேரத்தில் உயர்த்தினார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் ரிங்கு சிங் தட்டிச் சென்றார். இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரிங்கு சிங் கைகளில் கோப்பையை கொடுத்து பும்ரா கொண்டாடினார்.
இந்த நிலையில் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கிறார் ரிங்கு சிங். அதன்பின் நேரடியாக சென்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்பின் முதன்முதலாக தாங்கள் வாழ்ந்த வீட்டிற்கு சென்றுள்ள ரிங்கு சிங், வீட்டின் முன் தனது பெற்றோருக்கு இந்திய அணியின் ஜெர்சியை பரிசளித்தார்.
அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரிங்கு சிங், "எங்கிருந்து தொடங்கினேனோ அந்த இடத்தில்.. எனது தொடக்கத்தில் யார் காரணமோ அவர்களுடன்" என்று பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் உச்சத்தில் இருக்கும் ரிங்கு சிங், பழைய வாழ்க்கையை மறக்காமல் மீண்டும் சென்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.