உலகக் கோப்பையிலிருந்து ஒரு வழியாக வெளியேறி விட்டது இந்திய அணி. தற்போது தோல்விக்கான காரணம் குறித்த போஸ்ட் மார்ட்டம் தொடங்கியுள்ளது. இந்திய அணியை தேற்றுவதற்கான வழி என்ன என்பது குறித்து ஆளுக்கு ஒரு ஐடியாவைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நாமும் நம் பங்குக்கு சிலவற்றை காதில் போட்டு வைப்போம்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி என்பது கிரிக்கெட் உலகின் ஆஸ்கர் போன்றது. ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்கள் எந்த அளவுக்கு தரமானவையாக, கடும் போட்டியைக் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். அதேபோலத்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளும் வலுவானதாக இருக்க வேண்டும்,
ஆனால் நமது அணி எந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் போனது? ஃபார்மில் இல்லாத வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ரன் எடுக்கத் தடுமாறும் சச்சின் டெண்டுல்கர், நீண்ட நேரம் நிலைத்து ஆடினால்தான் ரன் எடுக்கக் கூடிய கங்குலி என ஏகப்பட்ட ஊனத்துடன்தான் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு நமது அணி பயணப்பட்டது.
முதல் சுற்றிலேயே தோற்று பரிதாபமாக நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அணித் தேர்விலேயே ஏகப்பட்ட குழப்பம். ஷேவாக்கை சேர்க்கக் கூடாது என தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் கூற, கண்டிப்பாக ஷேவாக் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அவரை சேர்த்தார் கேப்டன் டிராவிட்.
இளம் வீரர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்று பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூற, இளம் வீரர்களை அதிகம் சேர்த்தால் அவர்களை நம்ப முடியாது, அணிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி டிராவிடும், வெங்சர்க்காரும் கூறி கிழ போல்டுகளை அதிகம் சேர்த்து உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தே இந்தியா போல்டு ஆகி நிற்கிறது.
இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தைப் பற்றி ஆய்வு செய்வதை விட அடுத்து என்ன செய்ய வேண்டும்? அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு எப்படிப்பட்ட அணியை உருவாக்க வேண்டும் என்பது குறித்து சிந்திப்பதே சரியானதாக இருக்க முடியும்.
முதலில் களையெடுப்பு. ரிடையர்ட்மன்ட் வயதைத் தொட்டு விட்ட, தாண்டி விட்ட வீரர்களை முதலில் அணியிலிருந்து தூக்க வேண்டும். மூத்த வீரர்களின் சாதனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்களா, அவர்களால் அணிக்கு லாபம் உண்டா என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர்தான். ஆனால் தனிப்பட்ட சாதனைக்காக மட்டுமே அவர் விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உண்டு. நம்மவர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு அணிகளும் கூட இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளன.
சச்சினுக்கு 34 வயதாகி விட்டது. முன்பு போல அதிரடியாக அவரால் விளையாட முடியவில்லை. சரியாக ஆட மாட்டேன் என்கிறார் என்கிற பேச்சு எழும்போது மட்டும் கஷ்டப்பட்டு விளையாடி ஒரு அரை சதத்தையோ அல்லது சதத்தையோ போடுகிறார். அவ்வளவுதான், நிலையாக, தொடர்ச்சியாக விளையாடி அவர் வெகு நாளாகி விட்டது.
உடல் உபாதைகள் ஒருபக்கம், நட்சத்திர வீரர் என்ற சுமை மறுபக்கம், சீனியர் வீரர் என்ற சிக்கல் இன்னொரு பக்கம். இப்படி பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கும் சச்சினுக்கு ஒன்று நல்ல ரெஸ்ட் கொடுக்க வேண்டும். அல்லது கெளரவமான வழியனுப்பு நடத்த வேண்டும்.
அடுத்து ஷேவாக். சச்சினின் ஜெராக்ஸ், அதிரடி நாயகன் என்று பலமுறை பலரால் தூக்கி விடப்பட்டவர் ஷேவாக். ஆனால் இன்று சாதாரண அணியிடம் கூட திக்கித் திணறித்தான் ரன் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளார் இந்த டெல்லி பாய்.
அவர் சதம் போட்டு வெகு காலமாகி விட்டது. 2 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் சாதாரண பெர்முடா அணிக்கு எதிராகத்தான் அவரால் சதம் அடிக்க முடிந்தது. இலங்கை போட்டியிலும், வங்கதேச போட்டியிலும் அவரால் அணிக்குப் பயன் ஏதும் இல்லை.
சிறிது ஓய்வு கொடுத்து விட்டோ அல்லது நல்ல பயிற்சிக்குப் பின்னரோ மீண்டும் ஷேவாக்கை அணியில் சேர்க்கலாம். காரணம் இன்னும் சில காலம் விளையாடக் கூடிய வயதுதான் ஷேவாக்குக்கு. ஆனால் இப்போதுள்ள பார்மில் தொடர்ந்து அவரை விளையாட விட்டால் அவருக்கும் நல்லதல்ல, இந்திய அணிக்கும் நல்லதல்ல.
அடுத்து கங்குலி. கேப்டனாக இருந்து கலக்கியவர் கங்குலி. சொல்லி வைத்து வெற்றிகளைக் குவித்தவர். இளம் வீரர்களை சிறந்த முறையில் மோட்டிவேட் செய்து வெற்றிக்கனிகளைப் பறித்தவர். சிறந்த கேப்டன்.
இடையில் சில காலம் விளையாட விடாமல் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பி கலக்க ஆரம்பித்தார். இருந்தாலும் முக்கியமான இலங்கைப் போட்டியில் சொதப்பி விட்டார். இவருக்கும் ஓய்வு வயதுதான். இருந்தாலும் ஓரிரு ஆண்டுகள் இவராலும் விளையாட முடியும்.
கேப்டன் டிராவிட். அமைதியான கேப்டன், ஆணித்தரமான பேட்ஸ்மென். எல்லாம் இருந்தும் அதிக அளவில் வெற்றிகளைப் பறிக்க முடியாமல் திணறும் துரதிர்ஷ்டவசமான கேப்டன்.
இளம் வீரர்கள் மீது முழு நம்பிக்கை வைக்காமல் அவர்களை அலைக்கழித்து, தோல்விகளுடன் விளையாடி வருபவர். இவரிடமிருந்து கேப்டன் பதவியைப் பறித்து விட்டால், சிறந்த பேட்ஸ்மேனாக கலக்குவார். சிறந்த நடுக்கள ஆட்டக்காரரான டிராவிட்டுக்கு கேப்டன் பதவியை சுமக்க முடியவில்லை என்பதை சமீபத்திய அவரது ஆட்டங்களைப் பார்க்கும்போது தெரிய வரும்.
இன்னொரு சீனியரான அணில் கும்ப்ளே விடைபெற்று விட்டார். இந்தியாவுக்காக பல வெற்றிகளைத் தேடித் தந்தவர். மந்திரப் பந்து வீச்சாளர். இலங்கைக்கு எப்படி முரளிதரனோ அதுபோல இந்தியாவுக்கு கும்ப்ளே. இவரையும் நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
உலகக் கோப்பைக்கு முன்பாக அதிகப் போட்டிகளில் கும்ப்ளேவை விளையாட அனுமதிக்கவில்லை. இதன் பலன் மேற்கு இந்தியத் தீவுகளில் தெரிந்தது. அங்கும் கூட கும்ப்ளேவுக்கு சரியான வாய்ப்பு தரப்படவில்லை. வாய்ப்பளிக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கும் சொதப்பத்தான் செய்தார்.
சீனியர்களின் நிலை இப்படி உள்ளது. அடுத்து ஜூனியர்களைப் பார்ப்போம். ஸ்ரீசந்த், திணேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா ஆகிய மூன்று முத்தான வீரர்களை நமது அணி நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
குறிப்பாக ஸ்ரீசந்த் சிறப்பாக பந்து வீசி வந்தார். ஆனால் அவரை ஒரு போட்டியில் கூட சேர்க்கவில்லை. இதேபோல எம்மாம் பெரிய அணியாக இருந்தாலும், தைரியமாக, துணிச்சலாக சந்தித்து பயப்படாமல் விளையாடக் கூடிய திணேஷ் கார்த்திக்கையும் ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை. சுரேஷ் ரெய்னாவை அணியிலேயே சேர்க்கவில்லை.
தற்போதுள்ள நிலையில் மூத்த வீரர்கள் சிலரை பாரபட்சம் பார்க்காமல், அணியிலிருந்து தூக்க வேண்டும். இது சிரமமான, கஷ்டமான முடிவுதான் என்றாலும் கூட அவர்களால் அணிக்கு பலன் ஏதும் இல்லாத பட்சத்தில் தூக்கி சுமந்து என்ன பயன்?
இளம் வீரர்கள் நிறையப் பேர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். துணிச்சலாக அவர்களை அணியில் சேர்க்க வேண்டும். குறிப்பாக விக்கெட் கீப்பர் டோணியைத் தூக்கி விட்டு திணேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டும். டோணியை விட சிறந்த கீப்பர் என பாராட்டப்பட்டவர் கார்த்திக்.
மேலும் நெருக்கடியான நேரத்திலும் கூட இவரால் சிறப்பாக பேட் செய்ய முடிகிறது. மேலும் ஸ்டார் வளையம் எதுவும் இவரது தலைக்குப் பின்னால் இன்னும் வந்து சேரவில்லை. எனவே எந்த நெருக்கடியும் இல்லாமல் விளையாட முடியும்.
எதிர்காலத்தில் கேப்டனாகக் கூடிய தகுதி படைத்தவர் கார்த்திக் என சேப்பலே பாராட்டியுள்ளார். டிராவிடும் கூட கார்த்திக் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளவர்தான். ஆனால் டோணியின் நெருக்குதல் காரணமாக கார்த்திக்கை கிடப்பில் போட்டு விட்டனர் என்று தெரிகிறது.
அடுத்து யுவராஜ் சிங். இவர் மீது பயிற்சியாளர் சேப்பலுக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயமே இல்லை என்று கூறப்படுகிறது. தன்னை சூப்பர் ஸ்டாராக நினைத்துக் கொள்கிறார் யுவராஜ், ஆனால் அவர் இன்னும் வளரும் நட்சத்திரம்தான் என்பதை மறந்து விட்டார் என்று சேப்பல் கூறியுள்ளார்.
எனவே யுவராஜுக்கு சில போட்டிகளில் வாய்ப்பளித்துப் பார்க்கலாம். சரியாக, சீராக, நிலையாக ஆட அவர் தவறினால், தூக்கி விடலாம். இதில் பாரபட்சமே பார்க்கக் கூடாது.
பந்துவீச்சைப் பொருத்தமட்டில் இந்தியா படு வீக். நல்ல வேகப் பந்து வீச்சாளர் என்று யாரும் இல்லை. அதாவது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வித்திடும் வகையிலான வேகப்பந்து வீச்சாளர் நம்மிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இர்பான் பதானுக்கு நல்ல ஓய்வு கொடுத்து விட்டு அவரை மீண்டும் பயன்படுத்தாலம். அபாயகரமான பந்து வீச்சாளர் அவர். நல்ல ஓய்வு, பயிற்சிக்குப் பின்னர் பதானை அணியில் சேர்த்தால் இந்திய அணிக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
அதேபோல முனாப் படேல். இவருக்கும் போதிய பயிற்சிகள், தொடர் வாய்ப்புகள் கொடுத்தால் ஜொலிக்கக் கூடியவர். இவர்கள் தவிர வி.ஆர்.வி.சிங், ஆர்.பி.சிங் என இளம் பந்துவீச்சாளர்கள் தொடர் வாய்ப்பு இல்லாமல் தேங்கிப் போய்க் கிடக்கின்றனர். இவர்களுக்கும் அணியில் சம வாய்ப்பு கொடுத்து தேற்ற முடியும்.
சுழற்பந்து வீச்சைப் பொருத்தவரை தற்போது பெரும் வெற்றிடம் உள்ளது. இந்தியாவில் மட்டுமே நமது சுழற்பந்துவீச்சாளர்கள் மாயாஜாலம் செய்கின்றனர் - கும்ப்ளேவைத் தவிர்த்து.
முரளி கார்த்திக் சிறப்பாக பந்து வீசி வந்தார். அதேபோல, ரமேஷ் பவாரும் நல்ல பந்து வீச்சாளர்தான். ஆனால் இவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் தரப்படவில்லை. பவாருக்காவது அவ்வப்போது வாய்ப்புகள் வந்தன. ஆனால் முரளி கார்த்திக்கை சுத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
பந்து வீச்சைப் பொருத்தமட்டில் நாம் சுழற்பந்துவீச்சை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், மற்ற அணிகளைப் போல, வேகப் பந்து வீச்சில் புது பலம் பெற வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
இந்தியா, இலங்கை போன்ற ஓரிரு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கேற்ற வகையில்தான் ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. வேகப்பந்து வீச்சால்தான் அவர்கள் வெற்றியை சாதிக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் ஒர ஆடுகளம் கூட வேகப்பந்து வீச்சுக்கேற்ற வகையில் இல்லை என்பது கேவலமான ஒன்று. பேட்டிங்கை மட்டுமே நாம் பெரிதாக நம்புகிறோம். ஆனால் அது கதைக்கு ஆகாது. இந்தியாவை விட்டு வெளியே சென்று விட்டால், வேகப்பந்துக்குத்தான் வேலை அதிகம். பேட்டிங்கை மட்டும் நம்பிக் கொண்டிருக்க முடியாது.
இப்படி பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் நாம் எடுக்க வேண்டிய களைகள், கவனங்கள் நிறைய உள்ளது. அடுத்து, அடிக்கடி ஆட்டக்காரர்களின் வரிசையை மாற்றாமல் தொடர்ந்து சில போட்டிகளில் ஒரே வரிசையில் விளையாட விட்டு எதில் அவர்கள் சரியாக வருகிறார்களோ அந்த வரிசையில் கொஞ்ச காலம் அவர்களை விட்டு விட வேண்டும்.
இப்படிச் செய்வதால் அந்த வீரருக்கு தன் மீதும், தனது இடம் குறித்தும் முதலில் நம்பிக்கை வரும். ரன் குவிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். இது நமது இந்திய அணி நிர்வாகத்திடம் தற்போது சுத்தமாக இல்லை.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரும்போது அவர்களுக்கு குறைந்தது 10 போட்டிகளையாவது தொடர்ந்து கொடுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியா இருக்கிறது? சச்சின், டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங், கங்குலி, ஹர்பஜன் சிங், டோணி ஆகியோரின் இடம்தான் நிலையாக இருக்கிறது - அவர்கள் விளையாடினாலும், விளையாட விட்டாலும். மற்ற வீரர்களை குண்டாங்குறையாக பந்தாடுகின்றனர்.
இந்தக் குழப்பத்தை சரி செய்ய வேண்டும். அடுத்து அணிக்குத் தேவை ஒரு இளம் கேப்டன். துடிப்பான, புத்திசாலித்தனமான, துணிச்சலாக முடிவுகள், வியூகங்களை வகுக்ககக் கூடிய இளம் கேப்டனை இந்தியாவுக்குப் போட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
அடுத்து, பிராந்திய வாரியாக இட ஒதுக்கீடு வழங்கும் கோட்டா முறையை முதலில் அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அற்புதமான ஆட்டக்காரர்கள் அபரிமிதமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு என்பது கானல் நீராகவே உள்ளது.
கோட்டா முறையை ஒழித்து விட்டு திறமையான, இளமையான வீரர்களை அதிக அளவில் அணியில் சேர்த்து அவர்களுக்கு சம வாய்ப்புகள் அளிக்க வேண்டும்.
இதை விட முக்கியமான ஒரு விஷயம் அணியின் பயிற்சியாளர். கிரிக்கெட் விளையாடும் மற்ற அணிகளில் எல்லாம் பயிற்சியாளர் சொல்வதை வீரர்கள் காது கொடுத்துக் கேட்பார்கள், அதன்படி நடப்பார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் இது தலைகீழ். பயிற்சியாளரை மூத்த வீரர்கள் கண்டு கொள்வதே கிடையாது.
பயற்சியாளர் சொல்வதற்குக் கட்டுப்படுவது கிடையாது. அவர் சொல்லும் வியூகங்களை அமல்படுத்த முன்வருவது கிடையாது. மொத்தத்தில் அவர் தேவையில்லாத விஷயமாகவே பார்க்கப்படுகிறார். இதை சரி செய்ய வேண்டும்.
மொத்தத்தில் தேவையில்லா, லாயக்கில்லாத மூத்த வீரர்களை தூக்கி தூர எறிய வேண்டும். இளம் கேப்டனை நியமிக்க வேண்டும், இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு தர வேண்டும், முந்தையை சாதனைகளைப் பார்த்துக் கொண்டிருக்காமல் இப்போது எப்படி என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.
இதை விட முக்கியமான விஷயம், அணியில் யாருக்கும் நிரந்தர இடம் என்பதே இல்லாமல் செய்ய வேண்டும். விளையாடினால் இடம், இல்லாவிட்டால் சாமியார் மடம் என்ற கண்டிப்பான நிலையைக் கொண்டு வர வேண்டும்.
இவையெல்லாம் குறைந்தபட்ச சீரமைப்புப் பணிகள்தான். இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால் குறைந்தபட்சம் இதையாவது இந்திய அணி நிர்வாகம் செய்ய முன்வந்தால் அல்லது யோசிக்க முன்வந்தால் அதுவே இந்திய அணி இழந்த பெருமையை தூக்கி நிறுத்த போதுமானதாக இருக்கும்.