சென்னை : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் மோசமான துவக்கத்தை அளித்து அதிர்ச்சி அளித்தது.
இதன் பின்னணியில் இந்தியா சேப்பாக்கம் பிட்ச்சை தனக்கு சாதகமாக மாற்றியது தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா போட்ட இந்த திட்டம், இந்திய அணிக்கே பாதகமாக அமைந்தது. இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சரிவில் இருந்து இந்த போட்டியை தொடங்கியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம். இதை ஐபிஎல் தொடரிலேயே பல முறை பார்த்து இருக்கிறோம்.
உலகக்கோப்பை தொடருக்கு என்ன மாதிரியான பிட்ச் சேப்பாக்கத்தில் தயாராகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்த ரவி சாஸ்திரி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இந்த பிட்ச் நிச்சயம் முந்தைய சேப்பாக்கம் பிட்ச்களை விட அதிகமாக ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் உள்ளது என்றார்கள்.
அந்த அளவுக்கு பிட்ச்சில் நிறைய விரிசல்கள் இருந்தன. அதனால் பிட்ச்சில் இரண்டு வேகம் இருந்தது. அதாவது, பந்து பிட்ச் ஆன உடன் மெதுவாகவும் செல்லலாம், அல்லது வேகமாகவும் செல்லலாம்.
இது முதல் சில ஓவர்களில் வேகப் பந்துவீச்சுக்கும் உறுதுணையாக இருக்கும். ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்த போதும் அதே தான் நடந்தது. வேகப் பந்துவீச்சாளர் பும்ரா துவக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தினார். அதன் பின் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார்கள்.

ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி துவக்கத்தில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று விக்கெட்களை இழந்தது. மூன்று பேருமே டக் அவுட் ஆனது தான் அதிர்ச்சியான விஷயம். இதற்கு காரணம், வேகப் பந்துவீச்சை கணிக்க முடியாத அளவுக்கு அந்த பிட்ச் மாறி இருந்தது தான்.
போட்டிக்கு முன் நிச்சயம் இந்திய அணி நிர்வாகம் பிட்ச்சை தயார் செய்யும் போது தங்களின் உள்ளீட்டை அளித்து இருப்பார்கள். மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைக்க இந்தியா போட்ட அந்த திட்டம், இந்திய அணிக்கே பாதகமாக அமைந்தது.
ஆஸ்திரேலியா அந்த பிட்ச்சின் இரண்டு வேகத்தை பயன்படுத்தி கணிக்க முடியாத வகையில் பந்து வீசி, இந்திய வீரர்கள் சுதாரிக்கும் முன்பே மூன்று விக்கெட்களை கைப்பற்றியது.