மும்பை: இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல் உண்டாகிவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை விடவும் சில நட்சத்திர வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. மொத்தமாக 8 நாடுகளில் பங்கேற்கும் இந்த ஆசியக் கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட இடைவெளிக்கு பின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் கன்சிஸ்டன்சியுடன் ரன்களை சேர்த்தாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் கடுமையான விமர்சனத்தை பெற்று வந்தது. தற்போது சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய 3 தொடக்க வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவ்வளவு எளிதாக துணைக் கேப்டனை இந்திய அணியில் இருந்து பெஞ்ச் செய்ய முடியாது. இதனால் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் மீது கை வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், இந்திய அணி 3 வகையான கிரிக்கெட் அணிக்கும் ஒரே கேப்டனை கொண்டு பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. சுப்மன் கில்லின் கம்பேக் காரணமாக, சஞ்சு சாம்சனின் தலை விதி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனி இந்திய பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறப் போவதில்லை.
திலக் வர்மா அல்லது ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி பெஞ்ச் செய்யப் போவதில்லை. இதனால் சஞ்சு சாம்சனை வெளியில் அமர வைத்துவிட்டு, ஜித்தேஷ் சர்மாவை உள்ளே கொண்டு வருவார்கள். இந்த இந்திய அணியை பார்க்கும் போது, பேட்டிங் வரிசையை விடவும், சில நட்சத்திர வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
சுப்மன் கில் துணைக் கேப்டனாக இருப்பதால், அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் வந்து தொடக்கம் கொடுப்பார். அது சஞ்சு சாம்சனுக்கு சிக்கலாக முடியும். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தரப்பில் மட்டுமே அணியின் பேலன்ஸ் குறித்து முடிவு எடுக்க வேண்டும். ஆசியக் கோப்பை தொடரில் நமக்கு இன்னும் எளிதாக சில விஷயங்கள் புரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.