இந்தூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டி விடுமுறை நாளான ஞாயிறு அன்று நடைபெற்றதால் அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. நிச்சயம் டிக்கெட் இல்லாமல் பலர் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், சில நூறு பேர் மட்டும் இந்தப் போட்டியை டிக்கெட் இல்லாமல் ஓசியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதிலும் இந்தப் போட்டியில் அடித்த சிக்ஸர்களை டிக்கெட் வாங்காமல் பார்த்த அந்த நூறு பேர் இன்னும் முழுமையாக பார்த்தார்கள்.
யாருப்பா அது? வேறு யாருமில்லை. இந்தப் போட்டி நடந்த இந்தூர் கிரிக்கெட் மைதானத்தின் அருகில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அது மைதானத்தின் மேற்கூரையை விட ஒரு மடங்கு உயரமாக கட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்து மைதானத்தை முழுமையாக பார்க்க முடியும்.
அதன் மொட்டை மாடியிலும், பால்கனியிலும் ஏராளமான மக்கள் நின்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியை கண்டு களித்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 18 சிக்ஸ் அடித்தது. அதை அந்த மக்கள் முழுமையாக பார்த்து ரசித்தனர்.
மைதானத்தில் அமர்ந்து பார்த்தவர்கள் கூட சிக்ஸ் அடிக்கும் போது அதன் உயரத்தை சரியாக பார்க்க முடியாது. ஆனால், அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்த அந்த மக்கள், சிக்ஸ் எந்த உயரத்துக்கு போனதோ, அதை விட உயரத்தில் இருந்து பார்த்தனர்.
இப்போதெல்லாம் இந்தியா ஆடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் விலை பல ஆயிரங்களில் உள்ளது. குறைந்தது ரூ.5,000 இருந்தால் தான் போட்டிகளை காண முடியும். அதுவும் எங்கோ ஒரு தூரத்தில் அமர்ந்து போட்டியைக் காண வேண்டும். ஆனால், அந்த இந்தூர் குடியிருப்பு வாசிகள் செலவில்லாமல் போட்டியை காணும் வாய்ப்பை பெற்றனர்.
இந்தியா இந்தப் போட்டியில் முதலில் ஆடி 399 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. மழையின் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில், இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.