டெஸ்ட் தொடரில் இருந்து பிலாண்டர் விலகல்: தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
பெங்களூரு: பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெனன் பிலாண்டர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடித்தில் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பிலாண்டரும், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் டீன் எல்கரும் மோதி விழுந்தனர். இதனால் பிலாண்டரின் இடது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. காயம் பலமாக இருந்ததால் அவர் உடனடியாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, அந்த அணியின் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் உடல் திறமையை நிரூபித்து காட்டும் பட்சத்தில் அணியில் மீண்டும் இடம் பெறுவார் என்பது தெரியவரும்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா பின் தங்கியுள்ள நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளாரான பிலாண்டர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications