மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விழுந்த அடி.. முக்கிய ஸ்பின்னர் ஸ்ரேயங்கா பாட்டீல் விலகல்!
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரேயங்கா பாட்டீல் கணுக்கால் காயம் காரணமாக நடப்பு தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரேமா ராவத் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, பந்தை தடுக்க முயன்ற போது ஸ்ரேயங்காவின் வலது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கணுக்கால் தசைநார் கிழிந்திருப்பது உறுதியானது. இதனால் அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

23 வயதான ஸ்ரேயங்கா பாட்டீல், இதற்கு முன்னர் 2024 உலகக் கோப்பை தொடரையும் விரல் எலும்பு முறிவு காரணமாக தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இந்திய பந்துவீச்சில் முக்கிய இடத்தை பெற்று இருந்த நிலையில் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
யார் இந்த பிரேமா ராவத்?
அவருக்கு மாற்றாக அணியில் இணைந்துள்ள 24 வயதான பிரேமா ராவத், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லெக் ஸ்பின்னர் ஆவார். இவர் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியா ஏ அணியில் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு தற்போது முதல் முறையாக தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியை 114 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் வலுவான நிலையில் உள்ள இந்திய அணி, தனது அடுத்த லீக் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் ஸ்ரேயங்கா விலகியிருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
